புதுச்சேரி: புதுச்சேரியில் நிலம், மனை விற்கப்படும்போது, பத்திர பதிவு அலுவலங்களில் அரசுக்கு 10 சதவீத முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை, வளர்ச்சி பணிக்காக, பத்திர பதிவு துறையும், உள்ளாட்சி துறையும் 5 சதவீதம் என்ற விகிதத்தில் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன், பத்திரப்பதிவு துறை, ஒவ்வொரு ஆண்டும் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கு வழிகாட்டி மதிப்பு வெளியிட்டு வருகிறது. நிலங்களின் விலை உயரும் போது அதற்கு ஏற்ப வழி காட்டி மதிப்பு உயர்த்தப்படுவது வழக்கம்.
புதிய வழிகாட்டி மதிப்பு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிடும். இருப்பினும், ஏப்ரல் மாதம் பிறந்து மூன்று நாட்கள் உருண்டோடியும் புதிய சொத்து வழிகாட்டி மதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில்நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகதால், தற்போதை வழிகாட்டின்படி பத்திர பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் அந்தபத்திர பதிவு ஆவணங்கள் அனைத்தும் ‘பெண்டிங்’ போடப்பட்டு வருகிறது. பத்திர பதிவு செய்ய வருபவர்களின் கைரேகை உள்ளிட்ட அனைத்து பதிவு முடிந்தாலும், சொத்து பத்திரத்தை, பத்திர பதிவு அலுவலகமே வைத்துக்கொள்ளுகிறது.
புதிய வழிகாட்டி மதிப்பு குறித்த ஆணைவெளியானதும், அதற்கு ஏற்பமுத்திரை தாள் கட்டணத்தை கட்டிய பிறகு, பத்திர ஆவணங்களை தருகிறோம் என, பத்திர பதிவு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பத்திர பதிவு செய்ய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
வழக்கமாக, பிப்ரவரி மாதம் சொத்து வழிகாட்டி மதிப்பினை கணக்கிட குழு அமைக்கப்படும். மார்ச் மாதம் இக்குழு ஆய்வில் இறங்கி அறிக்கை தாக்கல் செய்யும். ஆனால் இந்தாண்டு இதுவரை இப்பணியும் மேற்கொள்ளப்படவில்லை.ஆனால், கடந்தாண்டு நவம்பரில் சொத்து வழிகாட்டி மதிப்பினை அதிகரிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இக்கோப்பு மீதும் இன்னும் முடிவெடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சொத்து வழிகாட்டி மதிப்பு கடந்த 2013-14ம் ஆண்டில் கடைசியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2016-17ம் ஆண்டு சொத்து வழிகாட்டி அதிகமாக உள்ளது என்று 25 சதவீதம் குறைக்கப்பட்டது. எனவே, புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அரசு வழிகாட்டி மதிப்பிற்கும், மார்க்கெட் மதிப்பிற்கும் பெரிய இடைவெளி விழுந்துள்ளது.
அரசுக்கும் வருமானம் குறைந்துள்ளது. தமிழகத்தில் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி நிலத்திற்கான சொத்து வழிகாட்டி மதிப்பு உயருமா அல்லது பழைய வழிகாட்டி மதிப்பே தொடருமா என்பதை அரசு வெளியிட்டு தெளிவுப்படுத்த வேண்டும்.
200 கோடியை தாண்டி இருக்கும்
புதுச்சேரி மாநிலத்தில் 2013-14ம் ஆண்டு 40 ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடந்து, 128 கோடி ரூபாய்க்கு முத்திரைத்தாள், பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, 125 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்துள்ளது. கடந்தாண்டே வழிகாட்டி மதிப்பு உயர்ந்திருந்தால் 200 கோடியை பத்திர பதிவு துறை தாண்டி இருக்கும்.