நெல்லை: சுடுகாட்டில் உயிருடன் வீசப்பட்ட மூதாட்டி! – மனிதாபிமானம் மறந்த உறவினர்கள்

நெல்லை மாவட்டம், களக்காடு சிதம்பரபுரம் பகுதியிலுள்ள சுடுகாட்டில் மூதாட்டி ஒருவர் தனியாக கட்டிலில் அமர்ந்திருப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்திருக்கின்றனர். அதனால் அவரிடம் சென்று எதற்காக அங்கு அமர்ந்திருக்கிறார் என்று கேட்டிருக்கின்றனர். அப்போது அதிர்ச்சியளிக்கும் வகையில், தன்னை உறவினர்களே அங்கு கொண்டு வந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

மூதாட்டியான அவர் தன்னுடைய பெயர் இசக்கியம்மாள் என்று 80 வயதாவதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன், நீண்ட நேரமாக உணவு, தண்ணீர் அருந்தாமல் வெயிலில் வாடிவருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதனால் அவருக்கு குடிப்பதற்கு தண்ணீரும் குளிர்பானமும் வாங்கிக் கொடுத்துவிட்டு பேசியபோது, உறவினர்களே தன்னை இங்கே கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையில் போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது சிதம்பரபுரத்தைச் சேர்ந்த இசக்கியம்மாளின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததும், அதன் பின்னர் அவரின் மகன் கந்தசாமி பராமரிப்பில் வாழ்ந்ததும் தெரியவந்திருக்கிறது. தன்னைக் கவனித்துக் கொண்ட மகன் கந்தசாமி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததால், அதிர்ச்சியடைந்த மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

கட்டிலுடன் வீசப்பட்ட மூதாட்டி இசக்கியம்மாள்

அந்தச் சமயத்தில் அவர் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 40,000 ரூபாயையும், அவரிடமிருந்த தங்க மோதிரத்தையும் சிலர் ஏமாற்றிப் பறித்துச் சென்றிருக்கின்றனர். அதன் பின்னர் அவருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் வீட்டிலேயே முடங்கிய அவரை, மகன் கந்தசாமியின் மனைவி மற்றும் உறவினர்கள் பராமரிக்க மறுத்ததுடன், லோடு ஆட்டோவில் கட்டிலுடன் ஏற்றி, சுடுகாட்டில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த போலீஸார் இசக்கியம்மாளை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை உறவினர்கள் யாரும் எற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஆனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இசக்கியம்மாளை தங்கள் பொறுப்பில் விட்டுச்சென்றால், தாங்கள் பராமரித்துக் கொள்வதாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

மூதாட்டியை ஏற்க உறவினர்கள் மறுப்பு

இந்த விவகாரம் குறித்து நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் கவனத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மூதாட்டி இசக்கியம்மாளை முதியோர் காப்பகத்தில் சேர்த்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், மூதாட்டி இசக்கியம்மாளை பராமரிக்க மறுத்த உறவிர்களின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து அந்தப் பகுதி மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.