பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ என்.ஒய். கோபாலகிருஷ்ணா அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று காங்கிரஸில் இணைந்தார்.
கர்நாடகாவில் வருகிற மே 10ம்தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸூம், பாஜக வும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பெல்லாரி மாவட்டம் குடிலகி தொகுதியின் பாஜக எம்எல்ஏ என்.ஒய். கோபாலகிருஷ்ணா கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் நேற்று பெங்களூரு வில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமை யில் காங்கிரஸில் இணைந்தார்.
6 முறை எம்எல்ஏவாக இருந்த என்.ஒய். கோபாலகிருஷ்ணா ஆரம்பத்தில் மஜதவில் இருந்தார். பின்னர் காங்கிரஸில் இணைந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.
பாஜகவில் இணைந்து எம்எல்ஏ ஆன இவர் மீண்டும் காங்கிரஸூக்கு திரும்பியுள்ளார். இவரைத் தொடர்ந்து மஜத எம்எல்ஏ சிவலிங்கேகவுடாவும் விரைவில் காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக எம்எல்சிக்கள் புட்டண்ணா, பாபு ராவ் சின்சிஞ்சூர் ஆகியோர் கடந்த வாரம் காங்கிரஸில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து மஜத எம்எல்ஏ சீனிவாஸ் காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக, மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ, எம்எல்சிக்கள் தொடர்ந்து காங்கிரஸில் இணைந்துவருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 முறை எம்எல்ஏவாக இருந்த என்.ஒய்.கோபாலகிருஷ்ணா ஆரம்பத்தில் மஜதவில் இருந்தார்.