புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் வாங்சுக் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்புஉறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்ங்யெல் வாங்சுக் இந்தியாவில் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவரைவிமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார். பிறகு மாலையில் மன்னரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, “பூடானின் எதிர்காலம் மற்றும்இந்தியாவுடனான தனித்துவமான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான மன்னரின் தொலைநோக்கு மிகவும் பாராட்டத்தக்கது” என்று ஜெய்சங்கர் கூறினார்.
இந்நிலையில் பூடான் மன்னர் வாங்சுக் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பூடான் உள்ளது. இரு நாடுகள் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன.
இந்தியா தொடர்ந்து பூட்டானின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது, மேலும் பூட்டானில் தொழில் முதலீடுகளுக்கான முன்னணி ஆதாரமாக உள்ளது.
வெளியுறவுத்துறைச் செயலாளர் வினய் வத்ரா கூறுகையில், ‘‘இந்தியா – பூடான் இடையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளோம். இது இருநாடுகள் இடையேயான முதல் ரயில் பாதை திட்டமாக இருக்கும்’’ என்றார்.