பஞ்சாப்: மாயமான துப்பாக்கி; ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; 4 ராணுவ வீரர்கள் பலி – ராணுவம் விசாரணை

பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் இருக்கிறது, இந்த முகாமில் இன்று அதிகாலை 4;30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கின்றனர். தற்போது அந்தப் பகுதி ராணுவ அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணுவ முகாம்

இது குறித்து பஞ்சாப் ராணுவ முகாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” அதிகாலை 04;35 மணி அளவில் பதிண்டா  ராணுவ நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியிருக்கிறது. ராணுவ நிலைய விரைவு எதிர்வினைக் குழுக்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. தாக்குதலுக்கு உள்ளானப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தத் தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் விவரங்கள் விரைவில் தெரியவரும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ராணுவ அதிகாரிகளின் உணவுக் கூடத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பதிண்டாவின் மூத்த காவல்துறை அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திடம்,” ராணுவ முகாமுக்கு வெளியே ஒரு காவலர் குழு காத்திருந்தது. ஆரம்பத்தில் ராணுவ முகாமின் நான்கு கதவுகளும் மூடப்பட்டிருந்தன.

காவல்துறை

ராணுவ முகாமுக்குள் நுழைவதற்கு காவல்துறையை அனுமதியளிக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, சம்பவம் நடந்த இடத்தை மட்டும் பார்வையிட அனுமதித்திருக்கின்றனர். ராணுவ முகாமில் இரண்டு நாள்களுக்கு முன்பாக 28 குண்டுகளுடன் துப்பாக்கி கானாமல் போன நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பயங்கரவாத தாக்குதல் இல்லை. மேலும், இறந்தவர்கள் குறித்த எந்த விவரங்களையும் ராணுவம் வெளியிடவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து முழு விவரங்களையும் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.