முதியோர் ஓய்வூதிய திட்டம் ரூ.1,000; ஆன்லைனில் புதிய வசதி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2023-24ஆம் நிதியாண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார். இதில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மாதாந்திர ஓய்வூதியத் தொகை

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் அனைத்து ஓய்வூதிய திட்டங்களுக்கும் 5,337.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி முடிய 34,62,034 பேர் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 14,36,569 பேர் பயனடைந்துள்ளனர்.

என்னென்ன தகுதிகள்

இந்த திட்டத்தின் மூலம் மாநில அரசின் பங்கீடு 500, மத்திய அரசின் பங்கீடு 500 என மொத்தம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் பயனை பெற ஆதரவற்றவராக மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 60 வயது மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். இதுதவிர இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம்,

பிற திட்டங்கள்

இந்திரா காந்தி மாற்றுத் திறன் உடையோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இணைய வசதி

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்பும் பொதுமக்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க எளிய முறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு விசாரணைக்கு அனுப்பப்படும்.

பொங்கல் பரிசு

இறுதியில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரால் ஒப்புதல் செய்யப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் மூலம் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு ஆண்டிற்கு இருமுறை பொங்கல், தீபாவளி பண்டிகையின் போது வேட்டி அல்லது சேலை வழங்கப்படும்.

பயனாளிகளுக்கு விதிமுறைகளின் கீழ் அங்கன்வாடி மையங்களில் உணவு உட்கொள்ளாவிடில் மாதம் 4 கிலோ தரமான அரிசியும், உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் 2 கிலோ தரமான அரிசியும் வழங்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.