கொழும்பு,-சீனாவுக்கு ஒரு லட்சம் செங்குரங்குகளை அனுப்பும் இலங்கை அரசின் திட்டத்திற்கு, அந்நாட்டின் விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான இலங்கையின் வனப்பகுதியில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்குரங்குகள் உள்ளன. இவற்றால், தோட்டங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, செங்குரங்கு இனத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், இவை பலனளிக்கவில்லை.
இதற்கிடையே, தங்கள் நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலைகளில் வைக்க செங்குரங்குகளை தரும்படி, சீன அதிகாரிகள் இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இலங்கையின் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது.
இதில், பயிர்ச் சேதங்களை தடுக்கவும், இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் ஒரு லட்சம் செங்குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவது குறித்து பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் இயற்கை ஆர்வலர்கள், ‘குரங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைக்காகவோ அல்லது விலங்குகளை பரிமாறிக்கொள்ளும் நடைமுறைப்படி தான் அவற்றை அனுப்ப வேண்டும்.
அதோடு, செங்குரங்குகளை அனுப்பும் முன், அந்த இனம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என வலியுறுத்தினர்.
![]() |
இதையடுத்து, செங்குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், இதற்கு சட்டரீதியாக தீர்வு காணவும் குழு ஒன்றை அமைத்து, அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இருந்தும், இலங்கை அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இருந்து விலங்குகளை, இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆய்வுகளுக்காகவோ மற்ற நாடுகளுக்கு அனுப்பக்கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
