மாய தோட்டா
இயக்குனர் : நந்தகுமார் ராஜூ
நடிகர்கள் : சைத்ரா ரெட்டி, அமித் பார்க்கவ், குமரன் தங்கராஜன்
ஹங்கமா ஓடிடி
சென்னை : நந்தகுமார் ராஜூ இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த மாய தோட்டா தொடரில் சின்னத்திரை பிரபலங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்க்கவ், குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமான ஹங்கமா ஓடிடி தளம், முதல் நேரடி தமிழ் தயாரிப்பான மாய தோட்டா வெப் சீரிஸை வெளியிட்டுள்ளது.
ஆக்ஷன், திரில்லர் கதை அம்சத்தைக் கொண்ட இந்த தொடர் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மாய தோட்டா
ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த மாய தோட்டா வெப் தொடரின் முதல் காட்சியில் இருந்தே பரபரப்புக்கு குறைவு இல்லாமல் அதிரடியாக இருந்தது. இந்த தொடரின் கதை என்னவென்றால், ஓட்டல் அறையில் அமைச்சர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். பல அடுக்கு பாதுகாப்பு மிகுந்த அறையில்,பாதுகாவலர்கள் பலர் இருக்கும் போது அமைச்சரை யார் சுட்டது? அமைச்சர் கொலைக்கான காரணம் என்ன என்ற கோணத்தில் கதை நகர்கிறது.
திரைக்கதையில் ஓட்டை
இந்தக் கொடூரமான கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க உயர்அதிகாரிகள் கடுமையாக போராடுகள், சஸ்பென்ஸ், அதிரடி காட்சி ஆகியவற்றுடன் கதை நகத்தைக் கடிக்க வைக்கிறது. கணிக்க முடியாத பல ட்வீஸ்டுகள் இந்த இணையத் தொடரின் சுவாரியஸ்தை கூட்டும் என்று பார்த்தால் அடுத்து இதுதான் நடக்கும் என்று நாமக்கே தெரியும் அளவுக்கு திரைக்கதையில் ஓட்டை.

சின்னத்திரை நடிகர்கள்:மாய தோட்டா வெப் தொடரில் சின்னத்திரையில் நாம் பார்த்து ரசித்தவர்கள் நடித்துள்ளனர். சைத்ரா ரெட்டி கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வதந்தி வெப் தொடரில் நடித்து மனம் கவர்ந்த குமரன் தங்கராசன் சூர்யாவாக நடித்துள்ளார். மற்றும் அமித் பார்கவ் தனது கடந்த கால வாழ்க்கையில் உள்ள உண்மையைத் தேடும் ஒரு மனிதனாக அர்ஜுன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். சிறப்பான நடிகர்களை இயக்குநர் சரியாக பயன்படுத்தவில்லை.

ஆறு எபிசோடுகள்:வழக்கமாக வெப்தொடர் என்றாலே ஒவ்வொரு எபிசோடும் 40நிமிடம் கட்டாயம் இருக்கும். ஆனால், இந்த வெப் தொடர் 20 முதல் 30 நிமிடம் வரை மட்டுமே இருந்ததால் அலுப்பை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், நகைச்சுவை என்ற வரும் சில மொக்கை காமெடிகளை தவிர்த்து இருக்கலாம். அதே போல, போலீஸ் உயர்அதிகாரிகளாக வரும் டிஜிபி, டிஐஜி, ஐஜி இவர்களைப் பார்த்தால் சிரிப்பு போலீசா என கேட்கத் தோன்றுகிறது. சும்மா வெட்டியா இருக்கிறேன் நேரம் போகவில்லை என்றால், இந்த வெப் தொடரை தாராளமாக பார்க்கலாம்.