‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இலியானா தனது நோய்க்கான காரணங்களை கூறாத நிலையில், கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இலியானா, அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். இதன் பின்னர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருப்பினும் அவர் அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். குழந்தையின் உடையின் புகைப்படம் மற்றும் தன் கழுத்தில் இருக்கும் செயின் டாலரில் அம்மா என்கிற வாசகம் இருப்பதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.