மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி ஆகஸ்ட் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளை நடத்தத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 3 முதல் எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி ஆகஸ்ட் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன் மற்றும் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து நடத்துகிறது.
இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச சர்ஃப் ஓப்பன் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, இந்த சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டியை நடத்தத் தமிழ்நாடு அரசு ரூ. 2.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சர்வதேச சர்ஃப் ஓபன் போட்டியை சிறப்பான முறையில் நடத்துவோம். ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் இப்போட்டியில் 80லிருந்து 100 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.
newstm.in