பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்கள்: பச்சைக் கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று (ஏப்ரல் 18 தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடமாடும் கண் மருத்துவப் பிரிவு வாகனம்

தேசிய நலவாழ்வுக் குழுமத்தில், பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2021-22-ஆம் ஆண்டு கள ஆய்வறிக்கையின்படி, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பிற்கான காரணிகள் மற்றும் பார்வை குறைபாட்டிற்கான முக்கிய காரணிகளில் முதியோர்களுக்கு ஏற்படும் கண்புரை ஒன்றாகும். இதை களையும் பொருட்டு, இப்பகுதிகளில் அதிகமான கண்புரை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதற்கும், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் வசதியாக, மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கண் மருத்துவப் பிரிவிற்காக புதிதாக வாகனம் வழங்கப்படுகிறது.

மானியக் கோரிக்கையில் அறிவிப்பு

2021-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1.50 கோடி செலவில் ஐந்து வாகனங்கள்!

அதன்படி, மாவட்ட நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேலம், திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ்நாடு நலவாழ்வுக் குழும நிதி உதவியுடன் 1.50 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் வகையில், ஐந்து மாவட்டங்களுக்கு நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவைக்கான 5 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

என்னென்ன வசதிகள்?

இந்த குளிரூட்டப்பட்ட வாகனம், கணினி கண் பரிசோதனை கருவி, சர்க்கரை நோய் விழித்திரை நிழற்படங்கள் எடுக்கும் கருவி ஆகியவற்றை கொண்டுள்ளது. கண் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களுடன் இவ்வாகனம், தினம் ஒரு கிராமத்திற்கு சென்று, கண் மருத்துவ உதவியாளர்களால் அப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு இவ்வாகனத்தில் அழைத்து வரப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் அவர்களை அதே வாகனத்தில் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இத்திட்டம் தமிழ்நாடு, கண்புரை பார்வையிழப்பு இல்லா மாநிலமாக விளங்கிட பெரிதும் உதவும். மேலும், இரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, நீரிழிவு போன்ற இணை நோய்களுடன் கண்புரை பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கும், துணையின்றி தவிக்கும் முதியோர்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு இந்தப் வாகனம் பெரிதும் பயன்படும்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.