நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனியின் `பிச்சைக்காரன்’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் காயமடைந்திருந்த அவர் அதிலிருந்து குணமடைந்து படத்தின் படப்பிடிப்புப் பணிகளை முடித்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால், மாங்காடு மூவிஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக் கூடம்’ திரைப்படத்தின் கருவையும் வசனத்தையும் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாகவும், அதனால் இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் காரணமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டைத் தள்ளிப்போட்டதால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படம் வெளியாவதைத் தடுக்க திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.