“முத்திரைத் தாள் மீதான 10 மடங்கு விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்" – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பின் (Guideline Value )மீது அரசு கொண்டுவந்த 33 சதவிகித உயர்வால் சந்தை விலை உயரும் என்பதால், அதனை அரசால்‌ கையகப்படுத்தப்படும்‌ நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டும் பயன்படுத்துமாறு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அண்ணாமலை

அந்த அறிக்கையில், “திறனற்ற தி.மு.க, ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌ தொடர்ச்சியாக விலையேற்றம்‌ ஒன்றை மட்டும்‌ மூன்று மாத இடைவெளியில்‌ மக்களுக்குப் பரிசாக வழங்கி வருகிறது. சொத்து வரி உயர்வு, குடிநீர்‌ வரி உயர்வு, பால்‌ விலை உயர்வு, மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பை (Guideline Value ) 33 சதவிகிதமும், முத்திரைத் தாள்‌ கட்டணத்தை 10 மடங்கும்‌ உயர்த்தியிருக்கிறது திறனற்ற தி.மு.க அரசு. தி.மு.க-வினர்‌, அவர்களது உற்றார்‌ மற்றும்‌ உறவினர்கள்‌ நடத்தும்‌ ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்கள்‌ கடந்த இரண்டு ஆண்டுகளில்‌ சந்தை விலையை பல மடங்கு கூட்டி சாமான்ய மனிதர்கள்‌ வீட்டுமனை வாங்கும்‌ திட்டத்தை கைவிடும்படி செய்திருக்கின்றனர்.

இது போதாதென்று தற்போது இருக்கும்‌ நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பை 33 சதவிகிதம் உயர்த்தியிருக்கின்றனர். கடந்த மாதம்‌ 30-ம்‌ தேதி பதிவுத்துறை தலைவர்‌ அனுப்பிய சுற்றறிக்கை எண்‌ 5247/எல்‌1/2023-1 படி, தமிழகம்‌ முழுவதும்‌ நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பை கண்டறிய ஒரு குழு அமைத்ததாகவும்‌, அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க தாமதம்‌ ஆவதால்‌ 2017-ம்‌ ஆண்டு குறைக்கப்பட்ட சதவிகித மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போது உள்ள நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பைவிட 33 சதவிகிதம் உயர்த்தியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.

முதல்வர் ஸ்டாலின்

அரசு நிர்ணயிக்கும்‌ வழிகாட்டி மதிப்பைவிட சந்தை விலை குறைந்தபட்சம்‌ 50 சதவிகிதம் அதிகமாகவே தமிழகம்‌ முழுவதும்‌ காணப்படுகிறது. தற்போது உயர்த்தப்பட்ட 33 சதவிகித வழிகாட்டி பாதிப்பினால்‌ சந்தை விலை மேலும்‌ கூடி சாமான்ய மனிதர்களின்‌ நிலம்‌, வீட்டு மனை அல்லது வீடு வாங்கும்‌ திட்டத்தை முழுவதுமாக முடக்திவிடும்‌. 2022-23 நிதியாண்டில்‌ பத்திரப்பதிவுத்துறை ஈட்டிய மொத்த வருவாய்‌ 17,297 கோடி ரூபாய்‌, அதற்கு முந்தைய ஆண்டைவிட 24.3 சதவிகிதம் அதிகம்‌.

இவ்வாறு இருக்கையில்‌ எதற்காக முத்திரைத்தாள்‌ கட்டணத்தையும்‌ நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பையும் பன்மடங்கு உயர்த்த வேண்டும்‌… அரசின்‌ திட்டங்களைச் செயல்படுத்த கையகப்படுத்தப்படும்‌ நிலங்களுக்கு மட்டும்‌ இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வு சென்றால்‌ நிலத்தை இழந்த மக்கள்‌ பயனடைவார்கள்‌. ஆனால்‌, தமிழக அரசின் வழிகாட்டுதலின்‌ பெயரில்‌ ஒதுக்கப்பட்ட பரந்தூர்‌ விமான நிலையத்துக்குட்பட்ட மற்றும்‌ சுற்றியுள்ள நிலங்களை சமீபகாலமாக பலர்‌ வாங்‌கிவருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பை 33 சதவிகிதம் கூட்டியதால்‌ சமீபத்தில்‌ நிலம்‌ வாங்கியோர்‌ பல கோடி லாபம்‌ அடைவார்கள்‌.

அண்ணாமலை

இதில்‌ தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும்‌. நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பு உயர்வு தமிழகம்‌ முழுவதும்‌ அமல்படுத்தப்பட்ட நிலையில்‌, இனி சந்தை விலை கடுமையாக உயரும்‌ அபாயம்‌ இருப்பதால், அரசால்‌ கையகப்படுத்தப்படும்‌ நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டுமே இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்திறேன்‌. மேலும்‌, அறிவிக்கப்பட்ட 10 மடங்கு முத்திரைத் தாள்‌ விலை உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்‌ என்று தமிழக பா.ஜ.க சார்பில்‌ வலியுறுத்துகிறேன்‌” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.