Rahane 2.0: `இன்னும் ஆரம்பிக்கவேயில்ல!' புது வேகம்; புது துடிப்பு; ஏஜென்ட் ரஹானே ஆன் மிஷன்!

எந்திரன் படத்தில் ரெட் சிப் பொருத்தப்பட்ட பிறகு அந்த சிட்டி ரோபோவின் அடாவடிகளை பார்த்திருப்பீர்கள். அதுவரை இல்லாத துடிப்பும் வேகமும் கலந்து வில்லத்தனம் காட்டியிருக்கும் அந்த ரெட் சிப் பொருத்தப்பட்ட ரோபோ. கிட்டத்தட்ட அந்த ரெட் சிப் பொருத்தப்பட்ட ரோபோவை போலத்தான் செயல்பட்டு வருகிறார் அஜிங்கியா ரஹானே.

முன்னெப்போதும் அவரிடம் காணாத ஒருவித வேகத்தோடும் விரைப்போடும் ஆச்சர்யமூட்டும் பெர்ஃபார்மென்ஸ்களை செய்து வருகிறார். அந்த வில்லத்தனமும் எகத்தாள சிரிப்பு மட்டும்தான் மிஸ்ஸிங். மற்றபடி எல்லாவிதத்திலுமே ரெட் சிப் பொருத்தப்பட்ட ரஹானேவின் 2.0 அவதாரம்தான் இது.

Rahane

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 235 ரன்களை எடுத்திருந்தது. இந்த 235 ரன்களில் ரஹானேவின் 71 ரன்களும் அடக்கம். இந்த 71 ரன்களை எடுக்க அவர் 29 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். ஸ்ட்ரைக் ரேட் 244.83 இதுதான் ஆச்சர்யமே. ரஹானே மாதிரியான மரபார்ந்த முறையில் ஆடி 120-130 ஸ்ட்ரைக் ரேட்டை சராசரியாக வைத்திருக்கும் பேட்ஸ்மேன் ஒருவரால் எப்படி இப்படி 240+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடிகிறது? இந்த ஒரு போட்டி என்றில்லை. இந்த சீசனில் ரஹானே ஆடியிருக்கும் அத்தனை போட்டிகளுமே இதே ஆச்சர்யத்தையும் வியப்பையுமே கொடுக்கக்கூடியவை.

மும்பைக்கு எதிரான போட்டியில் வான்கடேவில் வைத்தே 27 பந்துகளில் 61 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 225.93.

அந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டர்களிலேயே ரஹானேவின் ஸ்ட்ரைக் ரேட்தான் அதிகம். அதற்கடுத்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 19 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 163. ஆர்சிபிக்கு எதிராக 20 பந்துகளில் 37 ரன்கள் இதிலும் ஸ்ட்ரைக் 180+. சன்ரைசர்ஸூக்கு எதிராக 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆடியிருக்கும் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக 5 போட்டிகளிலும் சேர்த்து 209 ரன்களை 199 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார்.

ரஹானே அவரின் கரியரின் எந்த சமயத்திலுமே இத்தனை அதிரடியாக இத்தனை பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதில்லை. ஐ.பி.எல் லிலுமே அதே கதைதான். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் இல் 4283 ரன்களை எடுத்திருக்கும் ரஹானேவின் சராசரி ஸ்ட்ரைக் ரேட் 123 மட்டும்தான்.

Rahane

எல்லா சீசனிலுமே இந்த 120-130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலேயேதான் ஆடியிருக்கிறார். நடப்பு சீசனை தவிர்த்து அதிகபட்சமாக 2019 சீசனில்தான் 137 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார்.

இந்த ஸ்ட்ரைக் ரேட்டோடு ரஹானேவின் இப்போதைய இந்த சீசனது ஸ்ட்ரைக் ரேட்டை ஒப்பிடுங்கள். மலைக்க மடுவுக்குமான வேறுபாடு தெரியும். ஆக கடந்த 15 வருடத்து ரஹானேவை இந்த நடப்பு சீசன் ரஹானேவோடு ஒப்பிட்டால் இப்போதைய ரஹானே பலமடங்கு மேம்பட்ட அப்டேட்டட் வெர்ஷனாகத்தான் இருக்கிறார்.

இப்படி ஒரு அதிரடி சூரராக ரஹானே மீண்டு வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியில் லிமிட்டெட் ஓவர் போட்டிகளிலிருந்து முதலில் ஒதுக்கப்பட்டார். அதன்பிறகு, ஐ.பி.எல் லிலும் நீண்டகாலமாக ஆடி வந்த ராஜஸ்தான் அணி அவரை கைவிட்டது. அப்படியே மற்ற அணிகளில் ஒரு ரவுண்ட் வந்தார். எங்கேயுமே அவருக்கேற்ற மரியாதையும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்த இடங்களில் ரஹானே தாமாக முன் வந்து கோட்டைவிட்டார். இறுதியாக, டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் என அறியப்பட்டவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார். இப்படி கடந்த சில ஆண்டுகள் முழுவதும் ரஹானேவுக்கு போதாத காலமாகவே இருந்தது. ரஹானேவின் கிரிக்கெட் க்ராஃப் சரியவெல்லாம் இல்லை. மாறாக, ஒரு பள்ளத்தைத் தோண்டி புதைபட்டுக் கொண்டது.

அப்படி ஒரு சூழலிலிருந்து ரஹானே மீண்டெழுவார் என யாருமே நம்பவில்லை. ரஹானேவை தவிர! சென்னை அணியுமே கூட ஏகப்பட்ட காயங்கள் ஏற்பட்டதால்தான் வேறு வழியே இல்லாமல் ரஹானேவை களமிறக்கியது. வீழ்ச்ச்சியை எதிர்கொண்டிருப்பவன் எப்போதுமே அதிலேயே வீழ்ந்து கிடப்பான் என்று யாராலும் சொல்ல முடியாது. ரஹானேவும் மீண்டு வந்தார். சென்னைக்காக நம்ப முடியாத பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்தார். அணியும் ரஹானேவால் பெரிய பெரிய பலன்களை அடைந்தது.

Rahane

ஒரு அணியில் நம்பர் 3 பேட்டரின் பங்கு ரொம்பவே முக்கியமானது. ஓப்பனிங் பேட்டர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அவர்கள் கொடுக்கும் மொமண்டமை தாழ விடாமல் அப்படியே மிடில் ஆர்டர்க்கு கடத்திவிட வேண்டும். ஒருவேளை ஓப்பனிங் கூட்டணி சொதப்பும்பட்சத்தில் ஒரு ஓப்பனரை போலவே முழு பொறுப்பையும் தலையில் ஏற்றிக்கொண்டு செயல்பட வேண்டும். சென்னை அணிக்கு எப்போதுமே இந்த நம்பர் 3 ஸ்லாட் ஸ்பெசலானதும் கூட.

ஏனெனில், அணியில் தோனிக்கு பிறகு அதிகம் கொண்டாடப்படும் வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவின் ஆஸ்தான இடம் அது. அவர் நல்ல ஃபார்மில் இருந்த வரைக்கும் அந்த இடம் அவருக்கானதாக மட்டுமே இருந்தது.

Rahane

ஒவ்வொரு சீசனிலுமே சராசரியாக 400-500 ரன்களை எளிதாக எடுத்துவிடுவார். ஸ்ட்ரைக் ரேட்டும் 140-150 ஆக இருக்கும். அந்த நம்பர் 3 ஸ்பாட்டில் ரெய்னா தனி ராஜ்ஜியமே நடத்தியிருந்தார். ஆனால், அவருமே ஒரு கட்டத்தில் சரிவை நோக்கி சென்றார். இடையில் ஒரு ஐ.பி.எல் சீசனில் ஆடாமல் விலகினார். அந்த சீசனில் ரெய்னாவின் இடத்தை நிரப்ப சென்னை அணி ரொம்பவே சிரமப்பட்டது. அந்த நம்பர் 3 ஸ்லாட்டில் யாரை ஆட வைப்பதென்பது புரியாமல் பலரையும் முயற்சித்து பேட்டிங் ஆர்டரே சிதைந்து போனது. அந்த சீசனில்தான் சென்னை அணி முதல் முறையாக ப்ளே ஆப்ஸூக்கே செல்லாமலும் வெளியேறியிருந்தது. அதற்கடுத்து 2021 சீசனுக்காக மினி ஏலத்தில் மொயீன் அலியை எடுத்து நம்பர் 3 பேட்டர் ஆக்கினார் தோனி. நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக ஆடி ரெய்னா ஏற்படுத்திய அதே தாக்கத்தை மொயீனும் ஏற்படுத்தினார். சென்னை அணியும் சாம்பியனானது. சென்னை அணியின் நம்பர் 3 ஸ்லாட்டிற்கு பின் இவ்வளவு கதை இருக்கிறது.

இப்போது அந்த நம்பர் 3 ஸ்லாட்டிற்கு ரஹானே வந்திருக்கிறார். உச்சக்கட்ட ஃபார்மிலிருந்த ரெய்னா என்ன தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதே தாக்கத்தை ரஹானேவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆடுவதெல்லாம் ஆர்த்தடாக்ஸ் ஷாட்கள்தான் என்றாலும் சரியாக சமயோஜிதமாக கணித்து தன் அனுபவத்தின் மூலம் பௌலர்களின் யூகங்களை உடைத்தெறிந்து வருகிறார். இப்போதெல்லாம் இடையிடேயே ஸ்கூப் ஷாட், ரேம்ப் ஷாட்டெல்லாம் ஆடுகிறார். நிஜமாகவே இது ரஹானே 2.0 வெர்ஷன்தான்.

பப்பாய் கார்ட்டூனில் அந்த டின்னில் இருக்கும் கீரையை சாப்பிட்டவுடன் வலுவேறி வெளுக்கும் கதாபாத்திரத்தை போலதான் ரஹானோ இப்போது இருக்கிறார். ஆனால், ஓரங்கட்டுதல்களும் விமர்சனங்களும்தான் ரஹானேவை வலுவூட்டியவை அன்றி வேறில்லை.

Rahane

‘இன்னும் எனது சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை.’ என கொல்கத்தாவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரஹானே பேசியிருக்கிறார். ரஹானே மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்பட வைக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.