''அலைகடலென திரண்டு''.. மாநாடு வெற்றிக்கு ஓபிஎஸ் நன்றி..!

திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் நேற்று (ஏப்ரல் 24) முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு சுமார் 20 கோடி ரூபாய் செலவானதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் நினைத்தவாறு இந்த மாநாடு இல்லை என்றும் ஆதரவாளர்கள் வட்டாரத்திலேயே அதிருப்தி எழுந்துள்ளது. மேலும், விழாவிற்கு சசிகலா, டிடிவி தினகரன் அழைக்கப்படும் அவர்கள் வரவில்லை என்பதால் மாநாடு கவனம் பெறவில்லை என்றும் சொல்கின்றனர். இந்த நிலையில், திருச்சியில் நடந்த முப்பெரும் விழா வெற்றி அடைந்ததாக கூறி ஓபிஎஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்

”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்வதற்காக துவங்கப்பட்டது என்பதையும், புரட்சித் தலைவி அம்மாவால் பாதுகாப்போடு வளர்க்கப்பட்டது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

தொண்டு என்பது சுயநலமின்றி பிறர் நலத்திற்காக உழைப்பது. தொழில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னலத்திற்காகச் செய்வது. தொழில் தொண்டாகலாம். ஆனால் தொண்டு தொழிலாகக்கூடாது. தொண்டைத் தொழிலாக்குவது துரோகத்திலும் துரோகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தொண்டு இயக்கத்தினை ஓர் ஆணவக் கும்பல், ஒரு சர்வாதிகாரக் கூட்டம் தொழிலாக்கிவிட்டது.

ஓபிஎஸ் மாநாட்டில் டிடிவி தினகரன்?

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்; அந்த பதவிக்கு வருபவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வகுத்த விதியை குழிதோண்டி புதைத்து, புரட்சித் தலைவி அம்மாவை நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி ஒரு மாபாதகச் செயலை செய்து, தனக்குத் தானே மகுடத்தைச் சூட்டிக் கொண்டார் துரோகி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் துரோகத்தை செய்த சர்வாதிகாரியை கண்டித்தும், அதிமுக விதியை மீளக் கொண்டு வரவும், கழகத்தை சதிகாரக் கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் வண்ணமும் 24-4-2023 அன்று திருச்சியில் முப்பெரும் விழா நடைபெற்றது. என்னுடைய அறைகூவலை ஏற்று, முப்பெரும் விழாவில் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தப் புரட்சி மாநாடு மாபெரும் வெற்றியடைய பாடுபட்ட எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கும், அரசியல் ஆலோசகர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், காவல் துறையினர், பத்திரிகைத் துறையினர், தொலைக்காட்சி நண்பர்கள், மேடை அமைப்பு, மின் வசதி, உணவு வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை மேற்கொண்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ் அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.