திண்டுக்கல் : குடும்பத்தோடு கருணை கொலை செய்யுங்கள் – ஆட்சியரிடம் புகார் அளித்த பட்டதாரி குடும்பம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு அருகே சக்கிலிய வளவு கிராமத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-வனிதா தம்பதியினர். பட்டதாரியான இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேல்முருகனுக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை என்பதால், சுயதொழில் தொழில் செய்ய முடிவு செய்தார்.
அதற்காக அவர் நாயக்ககவுண்டன்பட்டியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரிடம் மூன்று லட்ச ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார். அந்த தொகையை வைத்து வேல்முருகன் கறவைமாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்
இந்த நிலையில் வேல்முருகன் கடனுக்கான வட்டியை செலுத்த சென்ற போது பரமேஸ்வரி நான்கு சதவீதத்தில் இருந்து பத்து சதவீதம் ஆக வட்டியினை உயர்த்தி கேட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கடனாக வாங்கிய மூன்று லட்சத்திற்கு இதுவரை வட்டியாக மட்டும் 11 லட்சம் செலுத்தியுள்ளார்.
இதனிடையே பரமேஸ்வரி பணத்தைக் கொடுக்கமுடியவில்லை என்றால் என் வீட்டில் வந்து கொத்தடிமையாக வேலை பாருங்கள் என்று கூறி வேல்முருகனின் கல்வி மற்றும் விளையாட்டு சான்றுகளை அபகரித்துள்ளார்.
இதனால் மனம் நொந்து போன வேல்முருகன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம், “கந்துவட்டி கேட்டு மிரட்டும் பரமேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தங்களை குடும்பத்துடன் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.