புதுச்சேரியில் கோவில் சொத்துக்களை அளவீடு செய்யும் பணி துவக்கம்: அறநிலையத் துறையினர் தீவிரம்| Valuation of Temple Assets Begins in Puducherry: Charity Department Intensifies

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 233 கோவில்கள் உள்ளன. இதில், புதுச்சேரியில் 179 கோவில்களும், காரைக்காலில் 51 கோவில்களும் அமைந்துள்ளன.

ஏனாம் பகுதியில் 3 கோவில்கள் அமைந்துள்ளன. மாகி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் ஏதுமில்லை; மாகியில் உள்ள கோவில்கள் அனைத்தும் தனியார் வசம் உள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் குறித்த முழுமையான விபரங்களை பக்தர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக, ‘ஒருங்கிணைந்த கோவில்கள் மேலாண்மை அமைப்பு’ என்ற ஆன்லைன் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், கோவில்களின் முகவரி, நடத்தப்படும் திருவிழாக்கள், பூஜைகள் விபரம், அவை நடக்கும் நேரம், கோவில்களின் அமைப்பு, வரலாறு, குளம், ஸ்தல விருட்சம், சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விபரங்களை திரட்டி ஆன்லைன் போர்ட்டலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டது. இந்த போர்ட்டலை, கடந்த 2022ம் ஆண்டு, கவர்னர் துவக்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த கோவில்கள் மேலாண்மை அமைப்பில் சில கோவில்களின் நிர்வாகத்தினரே முழுமையான விபரங்களை பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான கோவில்கள் குறித்த விபரங்கள் அளிக்கப்படவில்லை.

latest tamil news

இதையடுத்து, அனைத்து கோவில்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டி வெளியிடும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறையினர் இறங்கி உள்ளனர். குறிப்பாக, கோவில் சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் அவற்றை டிஜிட்டல் ஆவணமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு சொந்தமான சொத்து விபரங்களை முழுமையாக திரட்டி ஆன்லைன் போர்ட்டலில் இடம் பெற செய்வதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை துல்லியமாக அளவீடு செய்வதற்கும் இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை பின்பற்றி, தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் சிஸ்டம் உதவியுடன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை அளவிடும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஜி.ஐ.எஸ்., மூலமாக சொத்துகள் அமைந்துள்ள இடம், பரப்பளவு போன்றவற்றை துல்லியமாக அளவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.