சென்னை: இந்தியில் பேசாதீர்கள, தமிழில் பேசுங்கள் என விருது வழங்கும் விழாவில் தனது மனைவி சாயிரா பானுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாயிரா பானுவுடன் கலந்து கொண்டார். இதில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
அப்போது தொகுப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியையும் மேடைக்கு அழைத்து அவரை பேசுமாறு அழைத்தனர். இதையடுத்து சாயிரா பானு மைக்கை வாங்கினார். அப்போது ஏ.ஆர். ரஹ்மான் சொன்னதுதான் டிரென்டாகி வருகிறது.
அவர் மனைவியிடம் இந்தில பேசாதீங்கள், தயவு செய்து தமிழில் பேசுங்க ப்ளீஸ் என அன்பாக கூறினார். இதை அவர் மைக்கில் கூறியதும் அங்கிருந்த இயக்குநர் மணிரத்னம், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் சிரித்துவிட்டனர். இது குறித்த வீடியோ காட்சிகள்தான் வைரலாகி வருகிறது.
இதையடுத்து பேசத் தொடங்கிய சாயிரா பானு, என்னால் சரளமாக தமிழில் பேச முடியாது, அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறி ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசுகையில் தனது கணவருக்கு விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவரின் குரல்தான் மிகவும் பிடிக்கும்.
அவரின் குரல் மீது எனக்கு காதல் உண்டு என தெரிவித்தார். முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது நான் ஏதேனும் இன்டர்வியூ கொடுத்தால் நான் போட்டு பார்க்க மாட்டேன். ஆனால் இவங்க (மனைவி) அதை திரும்ப திரும்ப என் வாய்ஸ்காக போட்டு கேட்டு கொண்டிருப்பார் என்றார். அப்போதுதான் சாயிரா பானு ஏதோ பேச வர மைக்கை அவரிடம் கொடுத்ததும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் பேச வேண்டாம், தமிழில் பேசுங்கள் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் எப்போதுமே தமிழ் மீது அதிக பற்றுடையவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆங்கிலத்திற்கு இந்திதான் இணைப்பு மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏ.ஆர். ரஹ்மான் சற்றும் யோசிக்காமல் இந்திதான் இணைப்பு மொழி என கூறினார்.
அது போல் இந்தி திணிப்பு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்திய போது ழகரம் தாங்கிய தமிழணங்கே என்று ட்வீட்டரில் ட்வீட் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை மேடையில் பெற்றுக் கொண்டதும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசினார். பல மொழிகளில் இவர் இசையமைத்தாலும் தமிழ் மீது இவருக்கு இருக்கும் பற்று அளப்பரியது. தமிழா தமிழா நாளை நம் நாளே என்ற பாடலையும் அவர் பாடியவர்.
பொன்னியின் செல்வன் பாகம் 1 இல் பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலை பாடியிருந்தார். அது போல் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இதனால் அவர் பூரிப்படைந்தார். பாடலாசிரியரை வெகுவாக பாராட்டியிருந்தார். நடிகர் விக்ரமின் ஆதித்த கரிகாலனை போல் வசனம் பேசி வீட்டில் காமெடி செய்வேன் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார்.