பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாள்களாகச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பாரதி ராஜா, “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ்த்திரை உலகுக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்!” என்று தனது இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், “இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
I am so heartbroken, just this morning I called and enquired to where he was to go and visit him. Shocked beyond belief. Shared so much with him professionally and on a personal level we both learnt, laughed , fought , ate together and had long conversations about many things, he… pic.twitter.com/pFopx60D5u
— Radikaa Sarathkumar (@realradikaa) May 3, 2023
நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறேன். இன்று காலைதான் போன் செய்து அவரது உடல்நிலைக் குறித்து விசாரித்தேன். அவரைப் பார்க்கவும் நினைத்திருந்தேன். தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அவருடன் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். சிரித்து, சண்டையிட்டு, ஒன்றாகச் சாப்பிட்டு பல விஷயங்கள் குறித்து உரையாடி இருக்கிறோம். அவர் ஒரு திறமையான நபர். கண்டிப்பாக அவரை நான் மிஸ் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மனோபாலாவின் மறைவுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.