திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து, திருச்சி விமான நிலையம் வழியாக எக்கச்சக்கமாக கடத்தல் தங்கம் இறங்குகிறது. தங்கக் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவ்வப்போது வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதும், அவர்களிடம் தங்கக் கடத்தல் நபர்கள் சிக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.

டிஸைன் டிஸைனாக தங்கம் கடத்திவரப்பட்டாலும், அவை அதிகாரிகளிடம் பிடிபட்டு விடுகின்றன. அந்த வகையில், சார்ஜாவில் இருந்து `ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஒன்று நேற்றிரவு திருச்சிக்கு வந்தது. வழக்கம்போல விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது சார்ஜாவில் இருந்து `ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானத்தில் வந்திறங்கிய சந்தேகத்திற்கு இடமான இரண்டு ஆண் பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கின்றனர்.
அப்போது முதலாவது பயணி ரூ.60,03,075 மதிப்பிலான 975 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கேப்ஸ்யூல்களாக மாற்றி தன்னுடைய ஆசனவாய் பகுதியில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. மற்றொரு பயணியை சோதனை செய்தபோது, அவர் 685 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி, ஆசனவாய் பகுதியில் மறைத்து கடத்தி வந்ததும், 180 கிராம் தங்கச் செயினை பேண்ட் பாக்கெட்டில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து அவரிடமிருந்த ரூ.53,25,805 மதிப்பிலான 865 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ஒரே விமானத்தில் வந்திறங்கிய 2 பயணிகள் ஆசனவாய் பகுதியில் மறைத்து 1660 கிராம் தங்கத்தையும், 180 கிராம் தங்க செயின் என மொத்தம் 1840 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருக்கின்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1.13 கோடி எனக் கூறுகின்றனர் விமான நிலைய அதிகாரிகள். அதையடுத்து தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.