
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட மாபெரும் பேரணி பெங்களுருவில் மே 7 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், மே 7 ஆம் தேதி நீட் தேர்வு இருப்பதால் பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், பிரதமர் மோடியின் பெங்களூரு சாலை பேரணி மே 6 ஆம் தேதியே தொடங்கப்பட உள்ளது. மே 6 ஆம் தேதி 26 கிலோமீட்டரும் மே 7 ஆம் தேதி காலை 8 கிமீ தூரமும் பேரணி நடைபெறும் என்றும் மே 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு பேரணி முடிவடையும் என்றும் பாஜக முடிவு செய்துள்ளது.

அதாவது இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா பவன், ஆர்.பி.ஐ. மைதானத்தில் இருந்து தொடங்கி மல்லேசுவரம் சாங்கி டாங்கி ஏரி வரை ஒட்டு மொத்தமாக 26.5 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார்.இந்த நிலையில், பிரதமர் மோடி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் 35 சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை அந்த 35 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா, ‘நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் பேரணியை முன்கூட்டியே நடத்த கர்நாடக பாஜக பிரிவுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ மாணவர் கூட சிரமப்படுவதை நான் விரும்பவில்லை என்பது அவரது ஒரு வரி உத்தரவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.