புதுடெல்லி: ரூ.45 கோயில் புதுப்பிக்கப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு குடியிருப்பு மீதான சர்ச்சை அடங்கியபாடில்லை. இதன் படங்களை தனது கட்சி ட்விட்டரில் டெல்லி பாஜக வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி ஆளும் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் தனது அரசு குடியிருப்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் மேற்கூரை மூன்று முறை இடிந்து விழுந்ததாகக் கூறிய முதல்வர் கேஜ்ரிவால், தம் வீட்டை அரசு செலவில் புதுப்பித்திருந்தார்.
இதில், மார்பிள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இதற்காக செய்யப்பட்ட செலவு ரூ.45 கோடி எனப் புகார் கிளம்பின.
இதை கையில் எடுத்த காங்கிரஸும், பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சிக்கத் துவங்கின. ஏனெனில், முதன்முறை தம் தேர்தல் வெற்றிக்கு பின் கேஜ்ரிவால், அரசு குடியிருப்பு, வாகனத்தை தாம் பயன்படுத்தப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு தாம் ஏழைகளின் முதல்வர் எனக் குறிப்பிட்டவர், தனது சொந்த காரிலேயே முதல்வர் அலுவலகமும் சென்றிருந்தார். இதனால், கேஜ்ரிவால் செய்த செலவால் பெரும் சர்ச்சை கிளம்பின.
இதற்கு பதிலளித்த முதல்வர் கேஜ்ரிவால், பொதுப்பணித் துறையினரால் ரூ.30 செலவிடப்பட்டதாக ஒத்துக் கொண்டிருந்தார். பாஜகவினரும் பல கோடிகள் செய்வதாக புகார்களை அடுக்கியிருந்தார்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான சஞ்சய்சிங் கூறும்போது, ‘டெல்லி ஆளுநரின் அரசு குடியிருப்பு ரூ.15 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மத்தியப்பிரதேச முதல்வர்களுக்காக ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டிருந்தது.
டெல்லியில் கட்டப்படும் சென்ட்ரல் விஸ்டாவில் பிரதமருக்காக ரூ.500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவரது அரசு குடியிருப்பிற்கு ரூ.90 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் பயணிக்கும் வாகனத்தின் விலை ரூ.12 கோடி என அடுக்கியிருந்தார்.
தொடர்ந்து பாஜகவினர் டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் குடியிருப்பின் முன்பாக கடந்த திங்கள் முதல் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். கேஜ்ரிவாலின் அரசு குடியிருப்பின் புகைப்படங்களையும் தம் கட்சி ட்விட்டரில் வெளியிட்டதால், சர்ச்சை அடங்கியபாடில்லை.
தன் டிவிட்டரில் கேஜ்ரிவால் சொகுசு அறைகளின் படங்களை வெளியிட்ட பாஜக, ‘கேஜ்ரிவாலின் ராஜ மாளிகையின் படங்கள்…தன்னை சாதரண மனிதன் எனக் கூறிக்கொள்பவர், தன் சொகுசுக்காக ஏழைகள் பணத்தில் செலவிட்டுள்ளார்.
இந்த ராஜமாளிகைக்காக முறையான டெண்டர் விடாமல் ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தாலும் சரி, தங்கள் வீட்டின் கதவுகளை பொதுமக்களுக்காக திறந்து விடுங்கள் முதல்வரே! அதன் ராஜவாழ்க்கையை அவர்களும் பார்க்கட்டும்!’ ’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரான பாஜகவின் ராம்வீர் சிங் பிதூரி கூறுகையில், ‘தனது அரசு வீட்டை அலங்கரிக்க ரூ.45 கோடி செலவிட்ட முதல்வர் கேஜ்ரிவால் சிறை செல்வது உறுதி. இந்த செலவுகளுக்காக அரசு அவருக்காக ஒதுக்கிய தொகை ரூ.15 லட்சம் மட்டுமே. எனவே, இவரை சிறைக்கு அனுப்பும் வரை பாஜகவினர் ஓயமாட்டார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தவகையில், மேலும் பல பாஜகவின் டெல்லி தலைவர்கள், கேஜ்ரிவால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி விமர்சித்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கேஜ்ரிவால், அதானி விவகாரத்தை திசைதிருப்பவே தனது வீட்டை பாஜகவினர் பிரச்சனையாக்குவதாகக் கூறியுள்ளார்.