மும்பை இறுதிப்போட்டிக்கு வருவதை நான் விரும்பவில்லை – பிராவோ கலகல பேச்சு

ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் பிளே சுற்றில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் இடம் பெற்றது. இந்நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை – குஜராத் அணிக்கு குவாலிபையர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பால் 157 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் சென்னை அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எலிமினேட்டர் சுற்றில் மும்பை – லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 101 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் குவாலிபையர் 2-ல் குஜராத் அணியும் மும்பை அணியும் நாளை அகமதாபாத்தில் மோதவுள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி வருவதை விரும்பவில்லை என சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.

இது எனது தனிப்பட்ட ரீதியான உணர்வு. இறுதிப் போட்டியில் எங்களுடன் விளையாடும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்க வேண்டாம் என நான் கருதுகிறேன். என் நண்பர் பொல்லார்ட் அதை அறிவார். இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ள அணிகளுக்கு எனது வாழ்த்துகள். நாங்கள் எதிர்கொள்ள உள்ள அந்த அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன் என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ சிரித்தபடி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முறையே 2010, 2013, 2015, 2019 சீசன்களில் விளையாடி உள்ளன. அதில் சென்னை ஒரு முறையும், மும்பை மூன்று முறையும் வாகை சூடியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.