திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளத்தில்… அண்ணாமலை கடும் கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளத்தில் உள்ளதாகவும் அண்ணாமலை விளாசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்ள இருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அஷோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும் அண்ணாமலை விளாசியுள்ளார். வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, உடனடியாக காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.