காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் – ரணில் வகுக்கும் வியூகம்
Courtesy: கூர்மை

வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் உள்ள காணிகளை கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணி கட்டளை சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உத்தரவிட்டிருக்கிறார்.

அதுவும் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முதல் நாள் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்திருக்கிறார்.

தமிழர் பிரதேசங்களில் பௌத்தமயமாக்கல் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு மாறாகவும், சட்டங்களுக்கு அமைவானது என்று காண்பிக்க போலியாக தயாரிக்கப்பட்ட காணி உறுதிகளுடனும் பௌத்தமயமாக்கல் வேகமடைந்துள்ளது.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy 

1988இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி – பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பாகக் காணி அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், காணித் திருத்தக் கட்டளைச் சட்டம் குறித்து ரணில் பரிந்துரைத்திருக்கிறார்.

2015இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் போதும் காணி திருத்த கட்டளைச் சட்டம் குறித்து அப்போது பிரதமராக இருந்த ரணில் துரித நடவடிக்கைகளை எடுதிருந்தார்.

முப்பது வருட போராட்டம்

1983இல் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறிப்பாக 1948இல் இருந்து அரச அதிகாரிகளின் ஏற்பாட்டில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் காணிகள் அபகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இடையில் நடைபெற்ற முப்பது வருட போரினால் குடியேற்றங்கள் தடைப்பட்டிருந்தன. அல்லது தாமதமடைந்திருந்தன என்று கூறலாம்.

போரை இல்லாதொழித்த மகிந்த ராஜபக்ச, 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இராணுவத்தைப் பயன்படுத்தியே காணிகளை அபகரித்தார்.

ஆனால், கொழும்மை மையமாகக் கொண்ட தொல்பொருள் திணைக்களம், வன இலாகத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகிய அரச நிறுவனங்கள் மூலம் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் உத்தியை ரணில் 2015இல் பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தியிருந்தார்.

இலங்கையின் ஒற்றையாட்சி

இலங்கை ஒற்றையாட்சிச் சட்டத்தின் கிழ் காணிகளை அபகரிக்கும் இத் திணைக்களங்களுக்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். இராணுவமும் ஆதரவு வழங்கியிருந்தது.

2020இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவும் ரணில் கையாண்ட அதே உத்தியைத்தான் தொடர்ந்தார்.

எனினும் 2022 யூலை மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில், காணி அபகரிப்புகளை முழுமையாகச் சட்டரீதியாக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ரணில், பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றை நியமிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.

காணி முகாமைத்துவம் குறித்து நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துகளை திருத்துவது, உள்ளீடு செய்வது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் சென்ற புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது ரணில் வலியுறுத்தியிருக்கிறார்.

காணிக் கட்டளை சட்ட திருத்தங்கள்

காணிப் பயன்பாடுகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றதாக காணப்படுவதாகவும் ரணில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குக் காணிகளை பெறுவதில் காணப்படுகின்ற சிக்கல்களை நீக்கிப் புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவே ரணில் அதிகமாகப் பிரஸ்தாபித்திருக்கிறார்.

காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபைகளின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள காணி உரிமையாளர்களின் விபரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள், பயன்படுத்தப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாகக் கண்டறிந்து பிரதேசச் செயலாளர் மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ரணில் அதிகாரிகளுக்கு உத்திரவுமிட்டுள்ளார்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy

ஆனால், இலங்கைத்தேசிய காணி ஆணைக்குழு கடந்த முப்பத்தைந்து வருடங்களாக உருவாக்கப்படவில்லை என்பதுதான் இங்கே வேடிக்கை. இந்த நிலையிலேயே புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை வகுக்குமாறு ரணில் உத்திரவிட்டிருக்கிறார்.

காணிச் சட்டத் திருத்தம் பற்றித் தேசிய கொள்கை ஒன்றை வகுக்க வேண்டுமானால், வடக்குக் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எதுவும் இல்லாமல் ரணிலின் உத்தரவு அமைந்துள்ளது.

அல்லது பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களை உள்ளடக்கிய தேசிய காணி ஆணைக்குழுவை உருவாக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறான திட்டங்கள் எதுவுமேயில்லாமல் வெறுமனே தேசிய காணிக் கொள்கை ஒன்றை வகுக்குமாறு முற்றிலும் சிங்கள அதிகாரிகளைக் கொண்ட குழுவிடம் உத்திரவிட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ரணில் பேச்சு நடத்தியிருக்கிறார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகள் பற்றியே பேச்சு இடம்பெற்றதாகத் தமிழரசுக் கட்சி கூறினாலும், காணித் திருத்தச் சட்ட ஏற்பாடுகள் இந்தப் பேச்சுத் தொடா்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களை மையப்படுத்தி இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழு ஒன்றை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கலாம்.

ஆனால், இதுவரையும் மாகாணங்களை உள்ளடக்கிய இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக் குழுக்கள் உருவாக்கப்படாமல் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அதிகாரிகள் அங்கம் வகிக்கும் அரச திணைக்களங்களிடம் பொறுப்புகள் பகிரப்படுள்ளன.

மகாலச் செயலாற்றுகை

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்குத் தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிடம் (கோப் குழு) 2018இல் ரணில் பிரதமராக இருந்தபோது உத்திரவிட்டிருந்தார்.

இந்த முயற்சியை 2020இல் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தார்.
2020ஆம் ஆண்டுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் சமகாலச் செயலாற்றுகை குறித்து ஆராய கோப் குழு தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அப்போது கூட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது.

பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதுடன், இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்குக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவை அடுத்தடுத்துக் கூட்ட வேண்டிய அவசியம் குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கோப் குழு பரிந்துரை

இந்த ஆணைக்குழு காணிகளைக் கையகப்படுத்தும்போது காணப்படும் பிரச்சினைகள் கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கமைய கடந்த இருபது வருடங்களில் காணி கையகப்படுத்தல் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய அறிக்கையும் 2018இல் சமர்ப்பிக்கப்பட்டிந்தது.

அது மாத்திரமல்ல, காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் பெறுமதியை மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்காக விசேட செயலணியொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கோப் குழு அப்போது பரிந்துரை வழங்கியிருந்தது.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy 

குறிப்பாக வடக்குக் கிழக்கில் பௌத்த குருமார் விகாரைகளை அமைக்கும்போது ஏற்படுகின்ற தடைகள் குறித்தும், பௌத்த குருமார் அடையாளப்படுத்தியுள்ள காணிகள் பற்றியும் உரையாடப்பட்டிருந்தன.

ஆகவே, 2018இல் கோப் குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு ஏற்பக் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைத்தீவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள காணிகள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டாலும் வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் பற்றிய விபரங்களே அதிகமாகப் பெறப்பட்டுத் தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இப் பின்னணியிலேயே காணிச் சட்டங்களைத் திருத்துவது தொடர்பாக ரணில் அதிகாரிகளுடன் உரையாடியிருக்கிறார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy

பத்து இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் தொடர்பாகவும் காணி பகிர்ந்தளிப்பு தொடர்பான தேசிய கொள்கைக்குள் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உள்ளடக்கித் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள கோப் குழு அப்போது பரிந்துரைத்தது.

குறிப்பாக 1972இல் நடைமுறைப்படுத்தப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தை தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க வேண்டும் என 2018 கோப் குழு வழங்கிய பரிந்துரைகளின் பிரகாரமே ரணில் சென்ற புதன்கிழமை காணிச் சட்டத் திருத்தங்கள் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

அதுவும் வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய காணிகள் அபகரிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை வைத்தல், பௌத்த விகாரைகள் கட்டுதல் போன்ற செயற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், காணிச் சட்டங்கள் பற்றிய திருத்தங்கள் தொடர்பாக ரணில் ஆராய்ந்திருக்கிறார்.

தமிழ் தேசிய கட்சி

பௌத்த மயமாக்கலைத் தடுப்பதற்குரிய எந்த ஒரு ஏற்பாடுகளும் இன்றி, காணிச் சட்டங்கள் பற்றிய கூட்டத்தை ரணில் நடத்தியமை குறித்துத் தமிழ்த்தரப்பு எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.

வடக்குக் கிழக்கில் உள்ள காணிகள் பற்றியும் அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்மை மையமாகக் கொண்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கைளிப்பது பற்றியும் இக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறான சூழலிலேதான், இரண்டு நாட்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ரணில் பேச்சுவார்தையில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், காணிகள் பற்றியோ குறிப்பாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழுவை நியமிப்பது குறித்தோ பேசப்பட்டதாகத் தெரியவில்லை.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட தகவல்.

ஆனாலும், ஒற்றையாட்சிச் சட்டத்தில் உள்ள மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள்கூட கொழும்பில் உள்ள சிங்கள அதிகாரிகளை மையப்படுத்திய தொல்பொருள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வன இலகாத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, தமிழர் நிலங்களில் காணி அபகரிப்புகள் சட்டரீதியாக அதாவது தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பௌத்த மரபுரிமை சார்ந்தது என்ற அங்கீகாரத்தை ரணில் விக்ரமசிங்க கன கச்சிதமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியமைதான் இங்கே வேடிக்கை.

தமிழர் பிரதேசங்களில் நிலங்களை அபகரித்துப் பௌத்த தேசிய மரபுரிமைகளைச் செயற்கையாக உருவாக்கிச் சிங்களப் பிரதிநிதித்துவத்தையும் சமப்படுத்தினால் வடக்குக் கிழக்கில் பதின்மூன்றை நடைமுறைப்படுத்தச் சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பிரச்சினை இருக்காது. அது இந்தியாவுக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

இலங்கை தேசியம்

குறிப்பாகப் பதின்மூன்று என்ற தனது முதுகெலும்பு தொடர்பாக இந்தியா கடும் அழுத்தங்களைக் கொடுத்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அதனைச் செயற்படுத்தப் பிரச்சினை இருக்காது.

ஏனைய மாகாண சபைகள் போன்று, தமிழ். முஸ்லிம் மற்றும் சிங்களம் கலந்த மாகாண சபையாக வடக்குக் கிழக்கு மாகாண சபைகளும் இயங்கும்.

தமிழ்த் தேசியம் – தமிழர் தாயகம் என்ற கோட்பாடு இல்லாமல் போகும். எனவே ஜே.ஆர் அன்று நினைத்த காரியத்தை, ரணில் இன்று ஒழுங்கு முறையாகச் செய்து முடிக்கிறார். 2009இல் மகிந்த போரை இல்லாதொழித்தார். 

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் | Amendment Of Land Ordinances Ranil S Strategy

2023 இல் ரணில் அரசியல் ரீதியாகத் தமிழ்த்தேசியத்தை நீக்கம் செய்கிறார்.
அதாவது தமிழ்த்தேசியம் – தமிழர் தாயகம் என்பதன் முதுகெலும்பான காணி – நிலத்தைத் துண்டாக்கி இலங்கை ஒற்றையாட்சி முறைமைக்குள் ஒருங்கிணைக்க ரணில் சிங்கள அதிகாரிகளுடன் புதன்கிழமை பேச்சு நடத்தியிருக்கிறார் என்பதே உண்மை.

மறுபுறத்தில் தமிழ்த்தேசியம் – தமிழர் தாயகம் என்பதை ஒற்றையாட்சிக்குள் விரைவாகக் கரைக்க வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தமிழ்த்தேசியக் கட்சிகளுடன் ரணில் உரையாடியிருக்கிறார்.

ஆகவே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் காணி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரங்கள் 1972 இல் இருந்து கொழும்மை மையப்படுத்தி இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் காரண – காரியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, சிங்களச் சூழ்ச்சிக் கருத்தியல் தற்போது பகிரங்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை காணிச் சீர்திருத்த ஆணைக்குழு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.

இந்த வல்லமையை இழக்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இலங்கைத் தேசிய காணி ஆணைக்குழுவை அமைக்கச் சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பில்லை என்பதும் கண்கூடு.

ஆகவே 2009 மே மாதத்தின் பின்னரான சூழலில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியே நிரந்த அரசியல் தீர்வு என்ற ஆழமான கருத்தை ஒரு வார்த்தையில் நிறுவாமல் பல கட்சிகளாகவும், பல குரல்களாகவும் தமிழ்த்தரப்பு சிதறுண்டு கிடப்பதை, ரணில் தனது அரசியலுக்குச் சாதமாகவல்ல “இலங்கைத் தேசியம்” என்ற கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்த மிக நுட்பமாகப் பயன்படுத்துகிறார்.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.