அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா..? பெற்றோர்கள் கடும் அதிருப்தி.. என்ன நடக்கிறது?

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் (கிண்டர் கார்டன்) கைவிடப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான பேச்சுகள் அரசல் புரசலாக இருந்து வந்த நிலையில், நடப்பாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்களும் இருக்கின்றன. இங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வந்தன. இருந்தபோதிலும், தனியார் பள்ளிகளில் இருப்பதை போல இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் இல்லாமல் இருந்தது.

அதாவது எல்கேஜி, யுகேஜி என்ற பெயர்களில் வகுப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகளை ஒப்பிடும் போது, அங்கன்வாடி குழந்தைகளின் கல்வித் திறன் குறைவாக இருந்தது தெரியவந்தது. எனவே, தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதை போல அரசுப் பள்ளியிலும் இந்த ‘கிண்டர் கார்டன்’ வகுப்புகளை அரசு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

எல்கேஜி யுகேஜி அறிமுகம்:
இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டில் அங்கன்வாடி மையங்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளாக பரிசோதனை அடிப்படையில் மாற்றப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. இதற்கு பெற்றோர் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சூழலில், கொரோனா ஊரடங்கு, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது. இதனால் எல்கேஜி, யுகேஜிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் அப்போதே அரசுப் பள்ளிகளில் இருந்து கிண்டர் கார்டன் வகுப்புகள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.

அறிவிப்பு வெளியாகவில்லை:
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அரசுப் பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகள் தொடரும் என அரசு அறிவித்தது. இந்த சூழலில், நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இதுதொடர்பாக எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர் சேர்க்கை எப்போது?
இந்நிலையில் தான், நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை சார்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், “வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறந்த பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்துவது தொடர்பான அறிவுறுத்தல் ஏதும் வெளியாகவில்லை.

கைவிடுகிறதா தமிழக அரசு?
மேலும், இந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. இதுவரை கூடுதல் ஆசிரியர்கள் யாரும் கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு நியமிக்கப்படவில்லை. இதை வைத்து பார்க்கும் போது, நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அரசுப் பள்ளிகளை தரம் உயரத்துவதில் உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

அரசு விளக்கமளிக்க வேண்டும்:
அடிப்படை கல்வியில் இருந்தே மாணவர்களை செம்மைப்படுத்துவதுதான் இதற்கு சரியான வழி. அதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நீக்கினால் மாணவர்களின் தொடக்கக்கல்வி திறன் பெருமளவில் பாதிக்கப்படும் என பெற்றோரும், கல்வியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். எனவே, இதுதொடர்பாக நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.