மக்களைத் தேடி மேயர் திட்டம் –  நாளை திரு.வி.க.நகர் மண்டலத்தில் நேரில் மக்களை சந்திக்கும் சென்னை மேயர்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் மேயர் ஆர்.பிரியா “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் 31.05.2023 அன்று நாளை மண்டலம்-6க்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்.

இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, “மக்களைத் தேடி மேயர்” திட்டம் 03.05.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, மண்டலம்-5க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் சாலை வசதி, பள்ளிக் கூடத்தில் கட்டிட வசதி, சமுதாயக் கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி, பிறப்பு / இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு ஏற்கப்பட்ட 331 கோரிக்கை மனுக்களில் 272 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதர கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் 31.05.2023 அன்று நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சென்னை மேயர் பிரியா மண்டலம் 6-க்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-6க்கு உட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி மற்றும் தொழில் வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.