புதிதாக பரவும் மால்வேர்..! இன்ஸ்டாகிராம், யூடியூப், நெட்ஃபிலிக்ஸ் யூசர்கள் கவனம்

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாத ஆட்களே இருக்க மாட்டார்கள். அப்படி யாராவது இருந்தால் அவர்களை ஏலியனைப் பார்ப்பது போல் அனைவரும் பார்ப்பார்கள். யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், நெட்ஃப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட செயல்களை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் இவற்றை பயன்படுத்தவில்லை என்றாலும், தனது சாதனத்தில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. 

சிலர் தேவையில்லாத போது செயலிகளை நீக்கிவிட்டு, தேவைப்படும்போது இன்ஸ்டால் செய்து கொள்வார்கள். இதுபோன்ற நபர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு புதிய மால்வேர் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. ஒருவேளை இந்த வைரஸ் உங்கள் சாதனத்தில் நுழைந்திருந்தால், Netflix கணக்கில் நீங்கள் கொடுத்துள்ள வங்கி விவரங்களை லாவகமாகத் திருடிவிடும். பின்னர் உங்கள் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து பணத்தையும் பறிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து CloudSEK என்ற எஐ பவர் மால்வேர் கண்காணிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இந்த மால்வேர் உங்கள் வங்கி விவரங்களை எளிமையாகத் திருடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யூடியூப், இன்ஸ்டாகிராம், நெட்ஃபிலிக்ஸ் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்தால் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் இதேபோன்று தோற்றமளிக்கும் செயலிகளை வலைதளங்களில் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யும்போது அவற்றில் ஒருவேளை இந்த மால்வேர் இருக்கலாம். 

நீங்களாகவே சென்று போலியான செயலிகளை இன்ஸ்டால் செய்யவில்லை என்றாலும், உங்கள் சாதனத்தில் என்னென்ன செயலிகள் இல்லை என்பதை சரியாக அறிந்து, மெசேஜ் மூலமாகவோ ஈமெயில் மூலமாகவோ, அந்த செயலியை டவுன்லோட் செய்யும்படியான லிங்க்-ஐ உங்களுக்கு அனுப்புவார்கள். அந்த லிங்க் பார்ப்பதற்கு உண்மையான நிறுவனம் அனுப்பியது போலவே இருக்கும். இதை நம்பி நீங்களும் அதை டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்த மறுகணமே, உங்கள் விவரங்கள் அனைத்தும் திருடப்படும். 

இந்த மால்வேர் தற்போது டெலிகிராம் செயலி வாயிலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல டெலிகிராமில் பிரபல நிறுவனங்களின் செயலிகளை டவுன்லோடு செய்தால், அதற்கான பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும் என்ற பொய்யான விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை நம்பி யாரும் அதை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டாம்.  இந்த விஷயத்தில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என CloudSEK நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே நீங்கள் பயன்படுத்தும் எந்த செயலியாக இருந்தாலும் அதை ப்ளே ஸ்டோரில் மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.