எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை… சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

திருவாரூர் மாவட்டத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் 8 சவரன் நகையை பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களை, சினிமா பாணியில் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஈ.சி.ஆர் சாலையில் வசிப்பவர் கண்ணன். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான கண்ணன், பணிக்கு சென்றதால் வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர். வெயில் தாக்கம் காரணமாக மாடிவீட்டின் போர்டிகோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள், கண்ணனின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அப்போது அவர்களை பார்த்து குறைத்த நாயை தாக்கிவிட்டு வீட்டிற்குள் சென்ற கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி, கண்ணன் மனைவி சங்கீதாவின் கழுத்தில் இருந்த தாலி செயின் உட்பட அணிந்திருந்த சுமார் 8 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

சங்கீதா மற்றும் அவரது மகள் வாசலுக்கு வந்து சத்தமிட்டதும் அங்கு திரண்ட பொதுமக்கள், தப்பிச் சென்ற கொள்ளையர்கள் இருவரையும் விரட்டிச் சென்றுள்ளனர். தகவலறிந்த எடையூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசாரும் கொள்ளையர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

போலீசாரையும், பொதுமக்களையும் அங்கும் இங்கும் அலைக்கழித்த கொள்ளையர்கள், கோபாலசமுத்திரம் வழியாக தில்லைவிளாகம் சென்று பின்னர் அலையாத்திகாடு செல்லும் சாலையில் சென்றனர். ஒருக்கட்டத்தில் போலீசார் தங்களை நெருங்கி வருவதை அறிந்த கொள்ளையர்கள் அப்பகுதியில் இருந்த இரால்பண்ணை குளத்தில் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்த வாய்காலில் குதித்து, பின்னர் கோரையாற்றில் நீந்திச் சென்று அலையாத்திகாட்டுக்குள் புகுந்தனர்.

ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான் காவல் நிலையங்களிலிருந்து வந்த போலீசார் அலையாத்திகாட்டுக்கு படகு மூலம் சென்று கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டதையடுத்து டிரோன் கேமரா கொண்டுவரப்பட்டு மாலை வரை தேடும் பணி நடைபெற்றது.

இரவு நேரத்திலும் அலையாத்திக்காடு மற்றும் அதன் அருகே உள்ள பேட்டை பகுதி, காடு திட்டு பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் அலையாத்திகாடு எல்லையில் உள்ள மாமணி ஆற்றில் கொள்ளையர்கள் இருவரும் நீந்திச்செல்வதை கண்ட போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த மேல சொக்கநாதபுரம் வினோபா காலனியை சேர்ந்த 20 வயதான தர்மதுரை மற்றும் அதற்கு அருகில் உள்ள அணைக்கரை காந்தி சாலை பகுதியை சேர்ந்த 27 வயதான நல்லதம்பி என்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் இரண்டு பேரிடமும் எடையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற 11 மணி நேரத்தில் சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டிச்சென்று கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பாராட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.