சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகை கிரண் எடுத்த முடிவால் ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டுக்கு மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் ஹீரோயின்கள் வருவது வழக்கமாகியிருந்தது. ஜோதிகா, சிம்ரன்,நமீதா என அந்தப் பட்டியல் நீளும். இப்போதும் மும்பையிலிருந்து குறிப்பிட்டு சொல்லும்படி கதாநாயகிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட்.
ஜெமினி: பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.
அன்பே சிவம்: அவரது கரியரில் முக்கியமான படமாக கருதப்படுவது சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.
ஓரங்கட்டப்பட்ட கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது.

பாபா ரஜினி: இந்நிலையில் ஜெமினி படத்தின்போது கிரண் எடுத்த ஒரு முடிவு ரஜினியை அலறவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது ஜெமினி படத்தில் கிரண் கமிட்டானபோதுதான் ரஜினிகாந்த் பாபா படத்தை ஆரம்பிப்பதாக இருந்ததாம். அப்போது படத்துக்கு கதாநாயகியையும் தேடிக்கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் கிரண் குறித்து ரஜினிக்கு தெரியவந்ததாம். உடனே அவரிடம் பேச்சுவார்த்தையும் தொடங்கியதாம்.

ரஜினியை அலறவிட்ட கிரண்: ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய நடிகர் என்பதும் கிரணுக்கு தெரியும். எனவே பாபா நடிக்க வேண்டும் என்றால் ஜெமினி படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இதனையொட்டி ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஜெமினி படத்துக்காக வாங்கிய அட்வான்ஸை ஏவிஎம்மிடம் திருப்பி கொடுக்க முடிவு செய்திருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த்தோ, தனக்கும் ஏவிஎம்முக்கும் இருக்கும் நீண்ட கால நட்பு இதனால் கெட்டுவிடும் என்று அஞ்சி; கிரணை தொடர்புகொண்டு ஜெமினி படத்திலேயே நீங்கள் நடிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.