தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. முன்னதாக அவர் அ.தி.மு.க-வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இதற்கிடையில் கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். குறிப்பாக கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது திமுக-வினர் தாக்கியதில் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று காலை 7 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடத்த தொடங்கினர் அமலாக்கத்துறையினர். சுமார் 18 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், முன்னதாக ஜூனியர் விகடனில் செந்தில் பாலாஜியின் அட்ராசிட்டி-கள் குறித்து விரிவாக எழுதிவந்தோம். குறிப்பாக 22/8/21-ல் வெளியான இதழில் ‘செந்தில் பாலாஜிக்கு செக்! வளைக்கும் வழக்குகள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம்.
அதில், “2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, தனது துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக மூன்று வழக்குகளை தமிழகக் காவல்துறையினர் பதிவுசெய்தனர். இவற்றில், ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “எங்களுடைய பணத்தை செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து பதில் மனு தாக்கலானது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு தரப்பு எந்த எதிர்வாதமும் வைக்கவில்லை என்பதால், இந்த ஒரு வழக்கை முடித்துவைப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது முதல் அவர் மீது மீதம் இருக்கும் இரண்டு பண முறைகேடு வழக்குகளை அமலாக்கப் பிரிவு கையில் எடுத்தது குறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் அதில், “லஞ்சம் கொடுப்பதும் தவறு. லஞ்சம் வாங்குவதும் தவறு என்று அரசியல் சாசனம் சொல்கிறது.
ஆனால், ‘வாங்கிய லஞ்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டால், அது குற்றமாகாதா?’ என்கிற விமர்சனங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை ஒட்டி எழுந்த விமர்சனங்கள், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கரூர் பகுதியில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளில் சில ஆவணங்கள் சிக்கியது. அதை அவர்கள் அமலாக்கத்துறையிடம் வழங்கியது, எடப்பாடி – ஓபிஎஸ்ன் டெல்லி பயணம், அண்ணாமலையின் டெல்லி அழுத்தம்” குறித்த விவரங்களையும் விரிவாக அடுக்கியிருந்தும்.

தொடர்ந்து 27/10//21-ல் வெளியான இதழில் “அள்ளிக் குவிக்கிறாங்க, அட்ராசிட்டி பண்றாங்க!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை, “ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையம் ஒன்றை வாங்கி, அந்த நிறுவனத்தின் மூலம் 5,000 கோடிக்கு மின்வாரியத்திடம் மின் கொள்முதலுக்கான ஒப்பந்தம் பெறவிருக்கிறார்.
இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் அமைச்சரையுமே நான் வெளிப்படையாகச் சொல்லுவேன்” என்று ஒரு வெடியை கிள்ளிப்போட்டது முதல் அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே சமூக வலைதளத்தில் நடந்த யுத்தம், நிலுவையிலிருக்கும் சில பில்களை க்ளியர் செய்வதற்கு, அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் ‘கமிஷன்’ கேட்பதாகப் எழுந்த புகார்” குறித்து தெரிவித்திருந்தோம்.

9/1/22-ல் வெளியான இதழில், “மாதம் ரூ.60 கோடி – ‘பொல்லாத அமைச்சர்’ – வெடிக்கும் பார் உரிமையாளர்கள்” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “பார் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகச் சங்க நிர்வாகிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். குறிப்பாக நம்மிடம் பேசியிருந்த தமிழ் மாநில டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, “பார் டெண்டரில் கரூர், சிவகங்கை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருசிலரின் பெயர்களிலேயே விண்ணப்பங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்.
525 ரூபாய் செலுத்தி சமர்ப்பிக்கப்படும் இந்த விண்ணப்பங்களுக்கு, 25,000 ரூபாய் இ.எம்.டி செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தப்பட்ட இ.எம்.டி-யும் ஒரே அக்கவுன்ட் நம்பரிலிருந்து செலுத்தப்பட்டதையும் பார்த்து விக்கித்துப்போனோம். இது குறித்து நாங்கள் டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, ‘அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் சொல்லித்தான் இப்படி விண்ணப்பங்கள் போடப்படுகின்றன.

எதுவாக இருந்தாலும் நீங்கள் மேலிடத்தில் பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டனர். இப்படிப் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு, ஒருசிலரே மொத்தமாக எல்லா டாஸ்மாக் பார்களையும் டெண்டர் எடுக்கத் துணிந்திருப்பது எங்களுக்குத் தெரியவந்தது. தமிழகத்தை நான்கு மண்டலமாகப் பிரித்திருக்கிறது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு. இந்த மண்டலங்களுக்குத் தனித்தனி ஆட்களை நியமித்து, அவர்களே பார் நடத்துவதற்கான லைசென்ஸைப் பெற முயல்கிறார்கள்.
கொதிப்படைந்து நாங்கள் விசாரித்தபோது, ‘நீங்கள் பார்களை நடத்த வேண்டுமென்றால், எங்களின் துணையோடுதான் நடத்த வேண்டும். லைசென்ஸ் எங்கள் பெயரில்தான் இருக்கும். ஒவ்வொரு மாதமும் விற்பனை வரித்தொகையாக எவ்வளவு அரசுக்குச் செலுத்துகிறீர்களோ, அதற்கு நிகரான தொகையை எங்களுக்குத் தந்துவிட வேண்டும்’ என்று டீல் பேசுகிறது அசோக் தரப்பு.

இதன்படி பார்த்தால், ஒவ்வொரு பாருக்கும் ஒன்றரை முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை நாங்கள் ‘கப்பம்’ செலுத்த நேரிடும். இப்படி, ஒரு மாதத்துக்கு 3,000 பார்களுக்கும் கணக்கிட்டால், 60 கோடி ரூபாயை முறைகேடாக பார் உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப் பார்க்கிறது செந்தில் பாலாஜி தரப்பு” என்று கொதித்திருந்தார்.
23/11/22-ல் வெளியான இதழில், “அடாவடி வசூல் அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “இரவு நேரத்தில் நடக்கும் சட்டவிரோத மது விற்பனை குறித்தும், கரூர் கம்பெனியின் பின்னணி குறித்தும் விரிவாக எழுதியிருந்தோம். அதில், “நம்மிடம் பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டட உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் அன்பரசன், “அமைச்சர் செந்தில் பாலாஜி. அமைச்சரின் சகோதரர் அசோக், கார்த்தி, ரமேஷ் ஆகிய மூவர்தான் கரூர் கம்பெனியை முன்னின்று நடத்துபவர்கள்.

மாவட்டத்துக்கு மாவட்டம் ஆட்களை நியமித்து வசூல்வேட்டை நடத்துகிறது ‘கரூர் கம்பெனி.’ இந்த ‘கரூர் கம்பெனி’ கேட்கும் பணத்தைக் கொடுக்க மறுத்தால், பார்களை மூடிவிடுகிறார்கள். இதனால், லைசென்ஸ் பெற்று பார் நடத்துபவர்களும் கரூர் கம்பெனிக்குக் கப்பம் கட்டித்தான் பாரை நடத்துகிறார்கள். இவர்கள் அடிக்கும் கொள்ளையால், அரசுக்கு மாதம் 60 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
24/5/23-ல் வெளியான இதழில், “சரக்கு… வழக்கு… எதிர்ப்பு… மயக்கத்தில் மதுவிலக்குத்துறை; கலக்கத்தில் செந்தில் பாலாஜி!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “கள்ளச்சாரயம் குடித்து பலர் இறந்ததும், அதுகுறித்த அரசை நோக்கி பாய்ந்த விமர்சன அம்புகளை தன்மீது தாக்குதல் விழாமல், வசதியாக முதல்வர் பக்கம் செந்தில் பாலாஜி திருப்பிவிட்டு மெளனமானது, முதல்வர் கூட்டியிருந்த மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விரிவாக எழுதியிருந்தோம். மேலும், அதில் அவர்மீது போடப்பட்ட மோசடி வழக்கு மீண்டும் உயிர்பெற்றிருப்பது குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

மேலும் அதில், “அ.தி.மு.க ஆட்சியில், போக்கு வரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் மோசடி செய்தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தங்களுக்குப் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாகச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இதை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர்மீதான வழக்கை ரத்துசெய்தது உயர் நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து 12 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என மே 16-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த மோசடி வழக்கில், Money Laundering நடந்திருப்பதாக எழுந்த புகாரில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்த தடையும் சமீபத்திய தீர்ப்பால் நீங்கியிருக்கிறது. வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட போக்குவரத்துறை ஊழியர்கள்மீதும் துறைரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
இதனால், ஏஜென்டுகளாகச் செயல்பட்ட ஊழியர்களும், மோசடியாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களும் பதறிப் போயிருக்கிறார்கள். இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அமலாக்கத்துறையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்போது செந்தில் பாலாஜியின் அமைச்சர் பொறுப்பே கேள்விக்குறியாகும்” என நம்மிடம் விவரித்திருந்தது அதிகாரிகள் வட்டாரம்.

31/5/23-ல் வெளியான இதழில், “பார் CLOSED – “எங்கே போச்சு இத்தனை நாள் வருமானம்?” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “தமிழகம் முழுக்க சட்டவிரோதமாக இயங்கிய டாஸ்மாக் மதுபானக் கடை பார்கள் அடுத்தடுத்து மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பார்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 90 பார்கள், சிவகங்கையில் 15 பார்கள், திண்டுக்கல்லில் 14 பார்கள் எனத் தொடர்ச்சியாகச் சட்டவிரோத பார்கள் மூடுவிழா கண்டன.
சட்டவிரோத பார்களை நடத்தி பண வெள்ளத்தில் நீந்திய முதலைகள் குறித்தும், அதனால் அரசுக்குக் கோடிக்கணக்கில் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விரிவாக எழுதியிருந்தோம். மேலும் அதில், “டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் விலை கூடுதலாகப் பெறப்படுவதைப் பொதுமக்களே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘பத்து ரூபா_பாலாஜி’ என்கிற ‘ஹேஷ்டேக்கில்’ வீடியோக்களை பதிவிட்டது” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

மேலும் 4/6/23-ல் வெளியான இதழில், “5 புள்ளிகள்… தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்… – ‘கொங்கு’ ரெய்டு!” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகள், அவருக்கு நெருக்கமான ஐந்து புள்ளிகள் வைக்கப்பட்ட குறி, தி.மு.க-வினர் வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கியது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.
குறிப்பாக அதில் வருமான வரித்துறை ‘டார்கெட்’ செய்த பலரும் ஊரில் இல்லாதது, அசோக்குமார் டெல்லி சென்றது, நான்கு பெரிய ரோஸ் மில்க் மூட்டைகளும் மூன்று பென்டிரைவ்களை கைப்பற்ற அதிகாரிகள் சென்ற போது சிலர் மூட்டைகளை அப்புறப்படுத்தியது, ஆனால், பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டது, அதிரச்செய்யும் பல ஆவணங்கள் சிக்கியது” என பல்வேறு தகவல்களை அடுக்கியிருந்தோம். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி கைதும் ஆகியிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளம்பியிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.