கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை வரவேற்று கரூரில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது சொந்த ஊரான கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திடீர் கரூர் நகருக்குள் வந்த ஒரு நபர், மக்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக வந்திருக்கிறோம். எங்க ஊரில் செய்தால் பத்தோடு பதினொன்றாக போய்விடும். அதனால் அவரது சொந்த ஊரில் கொடுக்கலாம் என்று வந்துள்ளோம் என்று கூறினார்.
அத்துடன் பட்டாசுளை வெடிக்க முயற்சியும் செய்தார். அவரை பட்டாசு வெடிக்கவிடாமல் போலீசார் தடுத்தனர். அத்துடன் அவரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். முன்னதாக இனிப்பு வழங்க முயன்றார். அதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கரூரில் பதற்றமாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை பிடித்து போலீசார் வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுததால் அவர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளும் வெளியானது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேட்டு, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட பலரும் ஓமந்தூரார் மருத்துவனைக்கு விரைந்து வந்து நலம் விசாரித்தனர்.
செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்; சட்டப்படி சந்திப்போம்” என தெரிவித்தார்.
இதனிடையே முதல்வர் முக ஸ்டாலினே நேரடியாக சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் விசாரித்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது . அமைச்சர்செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள்நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்றபெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் பகுதி முழுவதும் மத்திய துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அமலாக்கத்துறை அறிவிக்கவில்லை.