செந்தில் பாலாஜி கைது விவகாரம்: அண்ணாமலை, சவுக்கு சங்கருக்கு எப்படி தெரியும்?

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற போது ஏற்பட்ட நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவது ஆகியவை இன்று நாடு முழுவதும் கவனம் பெற்று வருகிறது.

பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யும் அத்தனை கட்சிகளையும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தனது ஏஜென்சிகள் மூலம் பழி வாங்கி வருகிறது. டெல்லி துணை முதல்வர், பீகார் துணை முதல்வர், தெலங்கானா முதல்வர் மகள், மேற்குவங்க முதல்வர் உறவினர் என பலரும் ஒன்றிய அரசின் ஏஜென்சிகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறையால் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று திமுகவினர் கூறுகின்றனர்.

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மருத்துவமனையிலும் அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் தான் செந்தில்பாலாஜி இருக்கின்றார்.

இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என்று கூறிவந்தார். அது தாமதமான சமயத்தில் அமலாக்கத்துறை வேறு மாநிலங்களில் பிஸியாக இருக்கிறது என்றும், விரைவில் இங்கு வர இருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை , “வருமான வரித்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் கிடையாது. விரைவில் அமலாக்கத்துறை சோதனை வரும், செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார்” என்று கூறினார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரும் கடந்த சில வாரங்களாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட உள்ளார் என்பதை திரும்ப திரும்ப கூறிவந்தார்.

அமலாக்கத்துறையின் திட்டமிடல்கள், நடவடிக்கைகள் எல்லாம் அண்ணாமலை, சவுக்கு சங்கர் உள்ளிட்டோருக்கு முன்கூட்டியே தெரிவது எப்படி? பாஜக பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் அமலாக்கத்துறையை ஏவி விடுகிறது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.