நியூயார்க்: ‘சிக்குன்குனியா நோய்க்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பானது,’ என, பிரெஞ்சு – ஆஸ்திரேலியா பார்மசி நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சிக்குன்குனியா’ என்பது ‘ஏடீஸ்’ வகை கொசுக்கள் கடிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு, வாந்தி, நாள்கணக்கில் மூட்டுவலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். உரிய சிகிச்சை எடுக்கவில்லை எனில் சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும். மழை சீசனில் அதிகம் பரவும். இது முதன்முதலில் 1952ல் தான்சானியா நாட்டில் கண்டறியப்பட்டது. 110 நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இதற்கு எந்த தடுப்பூசியும் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் இந்நோய் பாதிப்புக்கு எதிராக பிரெஞ்சு – ஆஸ்திரேலிய பார்மசி நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது. தற்போது இத்தடுப்பூசி தொடர்பாக மூன்றாம் கட்ட பரிசோதனை நடக்கிறது. இதில் இந்த தடுப்பூசி, சிக்குன்குனியாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் 4115 பேருக்கு இத்தடுப்பூசி ஒரு ‘டோஸ்’ செலுத்தப்பட்டது. இவர்களில் 266 பேரிடம் ஒரு வாரம், 28 நாள், மூன்று மற்றும் ஆறு மாத இடைவெளியில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு விபரம் சேகரிக்கப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 99 சதவீதம் பேரிடம், சிக்குன்குனியாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது கண்டறியப்பட்டது என நியூயார்க்கில் பார்மசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement