சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31ம் தேதி வெளியானது.
விஜய் சேதுபதி, சூரி லீடிங் ரோலில் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து விடுதலை 2ம் பாகம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முடிவால் விடுதலை தயாரிப்பாளரே கலக்கத்தில் உள்ளாராம்.
விடுதலை 2 ரீஷூட் அப்டேட்: வெற்றிமாறன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் வரலாற்றுப் பின்னணியில் சில குளறுபடிகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
முக்கியமாக புலவர் களியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் போராட்டங்களை பின்னணியாக வைத்து விடுதலை உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதில் அவர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுவிட்டதாக பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இதற்கெல்லாம் விடுதலை 2ம் பாகத்தில் வெற்றிமாறன் பதிலடி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் கூறினர்.
விடுதலை படத்தின் 2 பாகங்களின் படப்பிடிப்பையும் ஒரேகட்டமாக முடித்திருந்தார் வெற்றிமாறன். அதனால் முதல் பாகம் வெளியான 6 மாதங்களில் இரண்டாம் பாகமும் ரிலீஸாகும் என எதிபார்க்கப்பட்டது. இதற்காக போஸ்ட் புரொடக்ஷன், எடிட்டிங் வேலைகளை பார்த்துவந்த வெற்றிமாறனுக்கு பல காட்சிகளில் திருப்தி இல்லையென தெரிகிறது.
இதனால், ஒருசில காட்சிகளை மட்டும் மீண்டும் படமாக்கலாம் என கிளம்பினார் வெற்றிமாறன். சும்மாவே ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக செதுக்குவார் வெற்றிமாறன். ஆனால், முதல் பாகத்துக்கு கிடைத்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதன் காரணமாக விடுதலை 2ம் பாகத்தின் பல காட்சிகளை மீண்டும் படமாக்க முடிவெடுத்துவிட்டாராம்.
இதனையடுத்து விடுதலை 2 ரீஷூட்டிங் மட்டும் 50 முதல் 60 நாட்கள் நடைபெறும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை படத்தை இறுதியாக 45 கோடி வரை செலவு செய்து எடுத்து முடித்தார்கள். இப்போது ரீ-ஷூட் மட்டுமே 50 நாட்கள் வரை செல்லவிருப்பதால் இன்னும் 40 கோடி பட்ஜெட் தேவை என சொல்லப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கலக்கத்தில் உள்ளாராம்.