அமித் ஷா சொன்ன கணக்கு… பாட்னா மீட்டிங் என்னவாகும்? போட்டோ ஷூட்டும், பிரதமர் மோடியும்!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் கவனித்து வரும் விஷயம் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டம். 15க்கும் மேற்பட்ட கட்சிகள் கூடி ஆலோசனை செய்து வருகின்றன. எப்படியாவது மோடி அலையை வீழ்த்தி விட வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு தடை கல்லாக மாற வேண்டும் என எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்று கூடியுள்ளன. இதில் அழைப்பு விடுக்கப்படாத கட்சிகள் ஒருபக்கம்.

பிரதமர் வேட்பாளர் யார்?

கருத்து முரண்பாடுகளும், தேர்தல் எதிர்பார்ப்புகளும் இடையில் ஒன்றுகூடிய கட்சிகள் மறுபக்கம். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த பிரதமர் வேட்பாளர் யார்? எப்போது அறிவிக்கப் போகிறார்கள்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் தற்போது தான் பேசவே ஆரம்பித்துள்ளனர். அதற்குள் எப்படி தீர்வு காண முடியும் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

அமித் ஷா விமர்சனம்

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மாஸ்டர் மைண்டுமான அமித் ஷா ஜாலியான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமித் ஷா, பாட்னாவில் போட்டோ செஷன் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பாஜகவை எதிர்க்க பார்க்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் வலிமை

பிரதமர் மோடியை, தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் ஒன்றுகூட முடியாது. ஒருவேளை அவர்கள் ஒன்று சேர்ந்தால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியை தான் தேர்வு செய்வர். 300 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறச் செய்வர். இந்தியாவில் ஊழலை அகற்ற மிகவும் வலுவான அடித்தளத்தை மோடி அரசு போட்டுள்ளது.

ஊழல் செய்த UPA கூட்டணி அரசு

ஏனெனில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்துள்ளது. அதிலிருந்து மக்களை மீட்டு புதிய இந்தியாவை நோக்கி நகர்த்தி கொண்டு வந்துள்ளோம் என்று அமித் ஷா கூறினார். முன்னதாக ஜம்முவில் அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அமித் ஷா கலந்து கொண்டார்.

ஜம்மு கட்சிகள் மீது பாய்ச்சல்

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை மேற்குறிப்பிட்டவாறு கடுமையாக விமர்சித்தது கவனிக்கத்தக்கது. மேலும் மாநில கட்சியான தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றையும் விட்டு வைக்கவில்லை. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் ஆட்சியில் இருந்த போது 42 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக பகீர் விமர்சனத்தை அமித் ஷா முன்வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.