தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கியதுமே அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்தது. இதனால் குஜராத் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியது.
வரும் நாட்களில் தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் கூறி வருகிறது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் கேஎன் நேரு உத்தரவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தற்போது பெய்த மழையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் கேஎன் நேரு, தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முழுமையாக முடிக்க வேண்டும் என்று உத்தவிட்டார்.
மேலும் மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை அகற்ற வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் அனைத்து மோட்டார் பம்புகள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் கேஎன் நேரு உத்தரவிட்டார்.
மழை காரணமாக எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காத வகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேஎன் நேரு அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், சென்னையின் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. இதனால் ஞாயிற்றுக் கிழமை பெய்த மழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என அமைச்சர் கேஎன் நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.