வாஷிங்டன்: சாதி, மதம், பாலினப் பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று,பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பின்னர் பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றர், அப்போது, அவரிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரதமர் மோடி பதிலளிக்கும்போது, “நீங்கள் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் ஜானநாயக நாடு. ஜனநாயகம் எங்கள் ரத்தத்தில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசித்து கொண்டே வாழ்கிறோம். இது எங்கள் அரசியலமைப்பிலேயே உள்ளது.
மனித உரிமைகள் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகமாக வாழும்போது அங்கு பாகுபாடு என்ற பிரச்சினைக்கே இடமில்லை. சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்றார்.