சொந்த ஊரில் மைதானம் திறந்தார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

சேலம்: சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள கிரிக்கெட் மைதானத்தை அவரின் சக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலைபயிற்சி பந்துவீச்சாளராக இணைந்தார். அப்போது, அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, அதே தொடரில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி 20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நடராஜன்.

நடராஜனின் பந்துவீச்சில் யார்க்கர்கள் பெரிதும் பேசப்பட்டன. நடராஜனின் அசத்தல் ஆட்டம், இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தை ஈர்த்தது.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அதேவேளையில், தனது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமபுற இளைஞர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியிலும் நடராஜன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

நடராஜன் உருவாக்கியுள்ள இந்த மைதானத்தில், நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ஒரு மினி கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. சின்னப்பபம்பட்டி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நடராஜன் கிரிக்கெட் மைதானம் முழுமையாக தயாராகிவிட்ட நிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து மைதானத்துக்க சென்று பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிட்ச் அமைக்கப்பட்ட விதத்தையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகி பாபு, சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.