சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு மும்பையிலிருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்றுக்கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தொலைபேசியில், “டெல்லி சென்று அங்கிருந்து அமதாபாத் செல்லும் விமானத்தில் ஏறுவேன். உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் என்னை அழைக்கவும். கடத்தலுக்கான அனைத்து திட்டமிடல்களும் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாம் சரியாக இருப்பதால் கவலைப்பட வேண்டாம்” என இந்தியில் பேசியிருக்கிறார்.

இதை அருகிலிருந்து கேட்டப் பயணிகள் உடனே பதற்றத்துடன் அங்கிருந்து எழுந்தித்திருக்கின்றனர். அதோடு விமானத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவலளித்திருக்கின்றனர். இந்த நிலையில், மத்திய பாதுகாப்புப் படை அச்சுறுதல் ஏற்படுத்தியவரை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை,” விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் ரித்தேஷ் ஜுனேஜா (27) என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கேபின் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது குற்றம் பதிவுசெய்யப்பட்டது. பயணி மனநிலை சரியில்லாதவர். 2021 முதல் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்திருக்கிறது.