வாஷிங்டன்: அமெரிக்காவின் இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுவதாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு நாளும், இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கின்றனர். ஒருவரது பெயரை ஒருவர் சரியாக உச்சரிக்க முடிகிறது, ஒருவர் மற்றவரது உச்சரிப்பை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியக் குழந்தைகள் ஹாலோவீனின் போது ஸ்பைடர்மேன் ஆக மாறுகின்றனர். அமெரிக்காவின் இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
ராஜமெளலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றிருந்தது.