மாஸ்கோ: உக்ரைனை கைப்பற்ற முடியாமல் ரஷ்யா திணறும் நிலையில் அந்நாடு மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில் தான் ரஷ்யா வளர்த்த வாக்னர் குழு எனும் கொடூரமான 25 ஆயிரம் பேர் கொண்ட கூலிப்படை அந்நாட்டுக்கு எதிராக கிளம்பி இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே எல்லை பிரச்சனை இருந்தது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் நேட்டோ படையில் சேர உக்ரைன் முயன்றது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மோதல் வெடித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் அந்நாட்டின் ராணுவம், விமானப்படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கின. ரஷ்யாவை ஒப்பிடும்போது ராணுவம், ஆயுத பலத்தில் உக்ரைன் மிகவும் சிறிய நாடாகும்.
இதனால் போர் தொடுத்து எளிமையாக உக்ரைனை கைப்பற்றி விடலாம் என பெரும்படைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு அனுப்பினார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்தாலும் உக்ரைன் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருப்பது மூலம் நாம் அதனை புரிந்து கொள்ளலாம்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ரஷ்யா ராணுவத்துக்கு பெரிதும் பக்கபலமாக வாக்னர் குழு இருந்தது. இந்நிலையில் தான் இந்த குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது. அதாவது வாக்னர் குழு தலைவராக தற்போது யெவ்ஜெனி ப்ரிகோஸ் உள்ளார். இவர் மீதும் வாக்னர் குழு மீதும் சமீபகாலமாக ரஷ்யா அரசு அடக்குமுறையை செயல்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் யெவ்ஜெனி ப்ரிகோஸ் ஆத்திரமடைந்துள்ளார். மேலும் அவர் ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் ‛‛நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். நாங்கள் சாவுக்கு தயாராக இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை வீழ்த்துவோம். வழியில் எந்தத் தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கெனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தங்களுடன் இணைந்து மக்கள் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இருப்பினும் இதுபற்றி ரஷ்யா அரசு எதுவும் தெரிவிக்காத நிலையில் வாக்னர் குழு கூறிய தகவலை முற்றிலுமாக ரஷ்யா மறுத்துள்ளது. ஆனாலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவில் வாக்னர் குழு தாக்குதலில் இருந்து தப்பிக்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் வாக்னர் குழு என்றால் என்ன? அவர்களின் கோரமுகம் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ரஷ்யாவை தலைமையிடமாக கொண்டு வாக்னர் குழு செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் ஒரு தனியார் ராணுவம் போல் செயல்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களை ஏந்தி கொடூரமான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் பெற்றது இந்த குழு. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் கூலிப்படை என்றே கூறலாம். அதாவது இந்த குழு ரஷ்யா மட்டுமின்றி பிற நாடுகளுக்கு ஆதரவாகவும் பணத்தை பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும்.
இதற்கு முன்பு லிபியா, மாலி, சிரியா, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை போட்டுத்தாக்க, அரசியல் தலைவர்களை கொலை செய்ய இந்த Wagner Group குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறது.
ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் தடை சட்டம் இருந்தாலும் கூட பல சந்தர்ப்பங்களில் வாக்னர் குழுவை விளாடிமிர் புதின் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்யா ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோத செயல்களை இந்த வாக்னர் குழு புதினுக்காக செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் புதின் வளர்த்த வாக்னர் குழு தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது
2017 கணக்குப்படி இந்த குழு மொத்தம் 6000 கொலைகாரர்கள் இருந்தார்கள். தற்போது 25 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். அதோடு ஆயுதங்கள் இன்றி தனித்தும் போரிடும் திறன் கொண்டவர்கள். அதோடு ஈவு, இரக்கம் எதையும் இவர்கள் பார்க்க மாட்டார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்த குழுவினர் எலைட் கொலைக்காரர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.