கொலம்பியா நாட்டில் கடந்த மே -1 ம் தேதி ஒரு விமான விபத்து நடந்தது. இதில் 13 வயது சிறுமி லெஸ்லி தன் மூன்று சகோதரர்களுடன் அடர்ந்த காட்டில் சிக்கிக் கொண்டாள். முதல் சிறுவனின் வயது 9, அடுத்தவனின் வயது 4, கடைசி பையன் பிறந்து 11 மாதமே ஆகிறது. இவர்கள் அடர்ந்த மற்றும் பயங்கரமான விலங்குகள் வாழும் காட்டில் 40 நாட்கள் தனியாகத் தாக்குப் பிடித்துள்ளனர்!

அமேசான் காடுதான் உலகில் மிகப் பெரியது. இந்த காடு தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ளது. இந்த காடு 67,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றி எட்டு நாடுகள் உள்ளன! இந்த காடு மொத்த இந்தியப் பரப்பளவைவிட இரண்டு மடங்கு பெரியது! இது அதிகம் மழை பொழியும் காடு. ஜாக்குவார் என்ற சிறுத்தைகள், கொரில்லா மற்றும் அனகோண்டா போன்ற கொடிய உயிரினங்கள் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் காடு இது.
அந்த சிறிய ரக விமானத்தில் ஒரு தாய் தன் நான்கு குழந்தைகளுடன் பயணித்திருக்கிறாள். அந்த பெண்ணின் பெயர் மக்டலினா மூகுடியு வலன்சியா (Magdalena Mucutui Valencia) அந்த விமானத்தில் பைலட் உடன் ஒரு ஆணும் பயணித்துள்ளார்.
பயணத்தில் ஏற்பட்ட விபத்தில் இவர்கள் இருவரும் உடனடியாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில், குழந்தைகளின் தாய் நான்கு நாள்கள் உயிருக்கு போராடிய நிலையில் இறந்துள்ளார். மீட்புக்குழு நான்கு நாட்கள் கழித்தே இவர்களின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். அப்போது விமானம் தலைகீழாக ஒரு மரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது !

மீட்புக்குழுவினர் குழந்தைகள் உயிருடன் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்தனர். பொதுமக்கள், பழங்குடி மக்களுடன் இராணுவ வீரர்களும் குழந்தைகளை அந்த அடர்ந்த காட்டில் தேட ஆரம்பித்தனர். இவர்களுடன் இராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய்களும் தேடும் படலத்தில் இணைந்துள்ளது. அதில் ஒரு நாயின் பெயர் வில்சன். தேடும் பணியில் இந்த நாய் காணமல் போகிறது.
இந்த குழு நாற்பது நாட்கள் ஆகியும் சிறுவர்களை மீட்க முடியவில்லை. இந்த குழந்தைகள் சிக்கிக் கொண்ட இடம் யாரும் இதுவரை நுழையாத அடர்ந்த காடு.. அதனால் தேடும் பணி சவால் நிறைந்ததாகவே இருந்துள்ளது.
இந்த குழந்தைகள் யார் ஆதரவும் இன்றி நாற்பது நாள்கள் அந்த அடர்ந்த காட்டில் உயிர்வாழ்ந்துள்ளனர்! இவர்கள் காடுகளில் வாழும் பழங்குடி மக்களைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியமான தகவல்.
நாம் உயிர் வாழ அவசியத்தேவை சுவாசிக்கக் காற்று, குடிக்க நீர், சாப்பிட உணவு, வசிக்கப் பாதுகாப்பான வீடு ஆகியன. அந்த அடர்ந்த காட்டில் சுவாசிக்கச் சுத்தமான காற்றுக்குப் பஞ்சமில்லை. ஆனால் அவ்வளவு எளிதாகக் குடிக்கத் தண்ணீர் அங்குக் கிடைக்க வாய்ப்பில்லை. அந்த சிறுவர்கள் காட்டில் இயற்கையாக அமைந்துள்ள குளம் மற்றும் ஆற்றைக் கண்டுபிடித்துத்தான் தாகத்தைத் தீரத்துக் கொள்ள வேண்டும். பாவம் 9 வயது பையன் நான்கு வயது சிறுவனைக் கவனித்துக் கொண்டான் என வைத்துக் கொள்வோம். அடுத்து 13 வயது சிறுமி அந்த கைக்குழந்தை எடுத்துக் கொண்டே தண்ணீர் இருக்கும் இடத்துக்கு நடந்தே தேடி செல்ல வேண்டும்.

மேலும் இந்த காட்டை மழைக் காடு (rain forest) என்றும் அழைப்பார்கள். இங்கு மழை அடிக்கடி பொழிந்தால் குளம் மற்றும் ஆற்றில் கலங்கி தண்ணீர்தான் இருக்கும். அதாவது கிட்டத்தட்டப் பால் காப்பி நிறத்தில்தான் தண்ணீர் இருக்கும். இந்த தண்ணீரை அப்படியே குடிக்க முடியாது. அந்த தண்ணீரைக் குடிநீராக்க வேண்டும்.
அதற்காக இந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்கள் சில வகையான இலைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த இலையின் சாற்றைக் கலந்தால் தண்ணீரைத் தெளிய வைத்து விடுமாம் ! பின்னர் இந்த தண்ணீரைக் குடிக்கலாமாம். இத்தகைய பண்டைய முறைகளை அந்த சிறுமி தன் பாட்டியிடமிருந்து கற்றுத் தேர்ந்தவளாம்.
உதாரணமாகத் தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரத்தில் இந்த பழக்கம் இன்றும் உள்ளது. தேத்தான் மரத்தை Strychnos potatorum என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இந்த மரத்தில் விளையும் பழத்தின் கொட்டையைத் தண்ணீர் உள்ள பானையில் தேய்க்கிறனர். கொட்டையின் தூள் தண்ணீரில் கலந்த சில நிமிடங்களில் கலங்கிய தண்ணீர் தெளிந்துவிடும். பின்னர் இந்த நீரைக் குடிக்கலாம். இந்த கொட்டை கலந்த தண்ணீர் வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக நோய்க்குச் சிறந்த மருந்து எனவும் கருதப்படுகிறது !

தேத்தான் கொட்டை…
தொல்காப்பியத்திலும் நற்றினை பாடல்களிலும் இடம் பெற்றுள்ளன ! இதற்கெல்லாம் ஒரு படி மேல் போய்,
“இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” எனக் இதன் பயன்பாட்டை கலித்தொகை விளக்குகிறது.
இதன் மூலம் சங்ககாலம் முதலிருந்தே பல ஆயிரம் ஆண்டுகளாக தேத்தான் கொட்டைகளைத் தண்ணீரை சுத்தம் செய்ய தமிழர்கள் பயன் படுத்தி வருகின்றனர் எனத் தெரிகிறது. இந்த தேத்தான் கொட்டை நுட்பம் தமிழ் மொழியிலிருந்து உருவான பிற மொழி பேசும் மக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
நம் சமுதாயத்தில் இந்த தேத்தான் கொட்டை பயன்பாடு படிப்படியாகக் குறைந்துவிட்டது. காரணம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அலம் (Allum) என்ற பொட்டாசியம் சல்பேட் பயன்படுத்துகிறனர். பொட்டாசியம் சல்பேட்டும் கலங்கிய நீரைத் தெளிந்த நீராக்கும் பண்புடையது. இதைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் RO தொழில் நுட்பத்தின் வருகை இதன் பயன்பாட்டை பெரிதும் குறைத்துள்ளது.
இது மாதிரி சமையலுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லி இலைகளும் தண்ணீரிலுள்ள ஈயம் (lead), பாதரசம் (mercy) போன்ற நச்சுப் பொருட்களை உறிஞ்சி அகற்றும் பண்புடையது எனப் பல ஆராய்ச்சி கட்டுரைகள் விளக்குகிறது.
தமிழகத்தில் இருக்கும் இத்தகைய பண்டைய நுட்பங்களைப் போல் கொலம்பியாவிலும் தாவரங்களை வைத்து தண்ணீரைச் சுத்தப்படுத்தும் நுட்பம் இருக்கிறது. இந்த நுட்பங்களை லெஸ்லி கற்றுத் தேர்ந்ததால் இவர்கள் 40 நாட்கள் காட்டில் தாக்குப்பிடிக்க முடிந்துள்ளது.
தண்ணீர் குடிக்காமல் ஒருவரால் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆனால் இவர்கள் 40 நாட்கள் காட்டில் தாக்குப்பிடித்துள்ளனர். தேவையான அளவு தண்ணீர் அருந்தி உயிரைத் தக்கவைக்க அவர்களின் பாரம்பரிய அறிவு உதவியாக இருந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
உயிர் வாழ அடுத்து முக்கியமானது உணவு. நம் ஊரில் கோடையில் நிறைய மாம்பழம் கிடைக்கிறது. இது மாதிரி அந்த காட்டில் மே மாதம் பழங்கள் நிறையக் கிடைக்குமாம். அதனில் முக்கியமானது நட்சத்திர பழங்கள். இவை குற்றாலத்தில் அதிகம் கிடைக்கிறது. நீர்ச் சத்து அதிகம் உள்ள சுவையான பழமிது. இந்த பழங்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த வகைப் பழங்களே இவர்கள் சிக்கியுள்ள காட்டுப்பகுதியில் நிறைந்திருந்துள்ளது. இவையே இவர்களின் பசியாற்றியுள்ளது. மேலும் அங்குக் கிடைத்த கிழங்குகளை உண்டும் இந்த குழந்தைகள் உயிர் வாழ்ந்துள்ளனர்.

உயிர்வாழ அடுத்து தேவையானது பாதுகாப்பான வீடு. அந்த காட்டில் பாதுகாப்பான வீட்டிற்கு எங்கே செல்வது? 13 வயது சிறுமி லெஸ்லி பாரம்பரிய முறையில் காட்டில் உள்ள குச்சி மற்றும் இலை தழைகளைக் கொண்டு தற்காலிக வீட்டை அமைத்துள்ளார். அதனில் இந்த சிறுவர்கள் தங்கியுள்ளனர். இந்த வீடு மழைத் தண்ணீர் ஒழுகாதவாறு மட்டும் அல்ல கொசு நுழையாதவாறு இருக்க வேண்டும்.
எப்படித்தான் தற்காலிக வீட்டினை அமைத்தார்களோ?
எப்படித்தான் சமாளித்தார்களோ?
சில மணி நேர மின் வெட்டையே நம்மால் தாங்க முடியவில்லை.
“இந்த குழந்தைகள் மழை பொழியும் காட்டில் கொசுக்கள் மற்றும் நச்சு பூச்சிகளுக்கும் மத்தியில் 40 இரவுகளை எப்படித்தான் சமாளித்தார்களோ?” எனச் சிந்தித்தால் அவர்களின் பாரம்பரிய அறிவே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.
வில்சன் என்ற இராணுவ நாய்தான் இந்த குழந்தைகள் இருக்கும் இடத்தை அந்த அடர்ந்த காட்டில் கண்டறிந்துள்ளது. மீட்டுக் குழுவினர்களிடமிருந்து இந்த நாய் நான்கு நாட்கள் பிரிந்து சென்றுள்ளது. இந்த நாளில் இந்த நாய் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுடன் இருந்துள்ளது. பின்னர் மீட்புக் குழுவினருடன் இந்த நாய்தான் குழந்தைகளை இணைத்துள்ளது.

குழந்தைகள் நிறையக் கொசு மற்றும் பூச்சுகள் கடித்த தழும்புகளுடன்தான் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீட்புக்குழுவினரைப் பார்த்ததும் “எனக்குப் பசிக்கிறது” என்றது ஒரு குழந்தை !
“அம்மா இறந்துடாங்க” என்றது அடுத்த குழந்தை!
மிகவும் சோகமான அந்த நிலையில், நான்கு குழந்தைகள் தப்பி பிழைத்தது நமக்கு ஆறுதலைத் தந்தது.
மீட்பு குழுவினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது லெஸ்லி என்ற நான்கு வயது குழந்தை வரைந்த ஓவியம் உருக்கமாக இருந்தது. அதில் அடர்ந்த காட்டில் ஒடும் ஒரு ஆற்று ஓரத்தில் வில்சன் என்ற நாய் நிற்பது ஓவியமாக தீட்டப்பட்டு இருந்தது! அதிலிருந்து அந்த குழந்தை வில்சனை நன்றியுடன் நேசிக்கிறது என்பதை உணரமுடிந்தது.
வயதானவர்களை வாழும் நூலககங்கள் என்று கூறுவார்கள். பாட்டி, தாத்தாவுடன் வளரும் குழந்தைகள் வாழ்க்கைக்கு தேவையான அறிவையும் அனுபவத்தையும் பெறுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.