வாஷிங்டன்: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ம் நூற்றாண்டை, மிகச் சிறந்த நூற்றாண்டாக மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. நவீன ஜனநாயகத்தின் பாதுகாவலனாக அமெரிக்கா செயல்படுகிறது.
இரு நாடுகளும் இணைந்து கொள்கைகள், ஒப்பந்தங்களை மட்டும் உருவாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையை வளமாக்குகிறோம். அவர்களின் கனவுகளை நனவாக்குகிறோம். புதியதொரு விதியைப் படைக்கிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ம் நூற்றாண்டை, மிகச் சிறந்த நூற்றாண்டாக மாற்றும். இதில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்காற்றுவார்கள்.
இந்தியாவில் வறுமை வேகமாக ஒழிந்து வருகிறது. 140 கோடி இந்தியர்களின் தன்னம்பிக்கையால் இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது.
100 கலை பொக்கிஷங்கள்: எச்1பி விசா தொடர்பாக புதிய திட்டத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை வரையறுத்து வருகிறது. இதன்படி அமெரிக்காவிலேயே எச்1பி விசாவைப் புதுப்பித்து கொள்ள முடியும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 100 கலைபொக்கிஷங்களை திருப்பி வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
எகிப்தில் மோடிக்கு வரவேற்பு: அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நேற்று எகிப்து சென்றார். தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் அந்த நாட்டு பிரதமர் முஸ்தபா மேட்போலி நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் எகிப்துக்கு செல்கிறார். எகிப்தில் முதல்முறையாக பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியை இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.