அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும் சந்தர்ப்பத்திற்கு இணங்க மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு வசதி செய்து கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
அது தொடர்பான கடன் முறையில் தற்போது காணப்படும் நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ” கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் இதற்கு முன்னர் இது குறித்து தெளிவு படுத்தியுள்ளார் என குறிப்பிட்டார்.
இதனை அமைச்சரவையின் அவதானத்திற்கு கல்வி அமைச்சரினால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கு இந்த வசதியை நாங்கள் செய்து கொடுத்திருந்தோம் இதனை மேலும் விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுத்தோம்.
அதனால் நான் நினைக்கிறேன் மிகவும் பிரதானமாக இது மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகத்துக்கு மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வசதியை வழங்குவதற்கு நிதி முறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த “நல்லாட்சி காலத்தில் வட்டி இல்லா கடன் வசதியை அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று பல்கலைக்கழக பட்டப்படிப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கும், கல்வியை கற்பதற்கு விரும்பும் மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் 2021/22 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தரா தரப் பத்திர உயர் தரப் பரீட்சை மாணவர்களான ஏழாவது மாணவர் குழுவினருக்கு வட்டி இல்லா கடன் வசதி மூலம் பல்கலைக்கழக கல்வியை கற்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.
விஷேடமாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இக்கடன் வசதி வழங்குவது தொடர்பாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
2016 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த மாணவர்களுக்கு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 6 தனியார் கல்வி நிறுவனங்களில் 26 பட்டப்படிப்புக்களைத் தொடர வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த கடன் வசதி 8இலட்சம் ரூபாவாக வட்டி இல்லா கடன் தொகையாக வழங்கப்பட்டது.
இது தற்போது நடைபெறுவதில்லை, இது தொடர்பாக கல்வி அமைச்சு அல்லது அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது? என்பது தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த சந்தர்ப்பத்தை வழங்க, தற்போதைய நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முறைமையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்