இந்திய அணி ஆகஸ்ட் 31 முதல் ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்தினாலும், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால் ஹைபிரிட் மாடலில் இலங்கையில் சில போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர், இன்னும் சில நாட்களுக்கு விளையாட முடியாது. அவருக்கு இன்னும் காயம் குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யருக்கு காயம்
இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தற்போது அணியில் இடம்பெறவில்லை. ஏப்ரல் மாதம் அவருக்கு இங்கிலாந்தில் வெற்றிகரமாக முதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதி எட்டும் முயற்சியில் இருக்கிறார். லேட்டஸ்டாக வெளியான அறிக்கையின்படி, அவருக்கு முதுகு வலி இன்னும் உள்ளது. சமீபத்தில் NCA-ல், ஐயர் தனது முதுகுவலிக்கு ஊசி போட்டார். அதற்காக அவர் இன்னும் சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. இந்த காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஐபிஎல் 2023-ம் விளையாடவில்லை.
எப்போது காயம் குணமாகும்
ஐபிஎல் 2023-க்கு முன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அகமதாபாத் டெஸ்டின்போது கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் முழுவதுமாக களத்தில் இருந்த பிறகு, ஐயர் தனது கீழ் முதுகில் வீக்கம் இருப்பதாக கூறினார். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் பேட்டிங் செய்ய வரவில்லை. அதாவது போட்டி முடியும் முன்பே அகமதாபாத்தை விட்டு சிகிச்சைக்கா சென்றார். இதற்குப் பிறகு, அறுவை சிகிச்சை காரணமாக, அவர் ஐபிஎல் மற்றும் WTC இறுதிப் போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. அவர் போட்டியின் உடற்தகுதியை மீட்டெடுக்க இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்திய அணியின் செயல்பாடு
ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக மொத்தம் 10 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்டில் 666 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1631 ரன்களும், டி20யில் 1043 ரன்களும் எடுத்துள்ளார். தற்போது இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.