பாஜகவிற்கு எத்தனை சீட்… அதிமுக முடிவு என்ன? ஜெயக்குமார் மீண்டும் மீண்டுமா?

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சென்னை மாநிலக் கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை வைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சிலை வைப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

வேங்கைவயல் சம்பவம்

வேங்கைவயல் சம்பவத்தில் மாதங்கள் கடந்துவிட்டன. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் சமூக நீதியை பற்றி எப்படி இவர்கள் பேச முடியும். ஒரு உதாரணத்தை இங்கே சொல்லியாக வேண்டும். மண்டல் கமிஷன் அறிக்கையின் படி, 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இட ஒதுக்கீடு – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

கருணாநிதியாக இருந்தால் நீதிமன்ற உத்தரவு எனக் கூறிவிட்டு இட ஒதுக்கீட்டை மாற்றியிருப்பார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்படி செய்யவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது எனக் கூறி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்த்து விதிவிலக்கு பெற்றார். எனவே சமூக நீதி காக்கும் கட்சி என்றால் அது அதிமுக தான் என்று கூறினார்.

அம்மா உணவகத்தின் நிலை

மேலும் பேசுகையில், அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை பெயரை மாற்றி செயல்படுத்துவது. இல்லையெனில் மூடு விழா நடத்துவது. இதைத் தான் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. அம்மா உணவகங்கள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்று கண்கூடாக பார்க்கலாம். அம்மா மினி கிளினிக்குகளை பெயர் மாற்றி நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் என செயல்படுத்தி வருகின்றனர்.

ஐ.நா பாராட்டிய எம்.ஜி.ஆரின் திட்டம்

அங்கன்வாடி மையங்கள் எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் சிறப்பான முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஐ.நா சபையே அன்று பாராட்டு தெரிவித்தது. இதையெல்லாம் மூடுவது ஜனநாயக விரோத செயல் என்று விமர்சித்தார். மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்ற கேள்விக்கு, இதுபற்றி எத்தனை முறை சொல்வது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.

கூட்டணியும், தொகுதி பங்கீடும்

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவு செய்யும். இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. இதற்கென்று குழு அமைத்து கூட்டணி, தொகுதிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.