ரஷ்யா: 24 மணி நேரத்தில் பின்வாங்கிய WAGNER படை… பின்னணி இதுதான்! – பலவீனமடைகிறாரா அதிபர் புதின்?!

உக்ரைன் போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ரஷ்யா, உள்நாட்டுப் போரை எதிர்கொள்ளும் வகையில் அங்கு திடீர் பதற்றம் உருவானது. இதையொட்டி நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது அந்தப் பதற்றம் சற்றே தணிந்திருக்கிறது. ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கிளம்பிய அந்த நாட்டின் தனியார் ராணுவக்குழுவான வாக்னர், 24 மணி நேரத்தில் தங்களது கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டது ஏன்?

கூலிப்படையா வாக்னர் குழு?

ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரியான டிமிட்ரி உட்கினும், தற்போதைய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் இணைந்து இந்த வாக்னர் ராணுவக்குழுவை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. 1990-களின் பிற்பகுதியில் செச்சனியாவில், ரஷ்யா நடத்திய போரின்போது வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்துக்குத் துணை நின்றதாகத் தெரிகிறது. இருந்தும், 2014-ம் ஆண்டு வரை ஒரு ரகசிய ராணுவக்குழுவாகவே வாக்னர் இருந்துவந்தது. உக்ரைனின் கிரீமியா தீவை 2014-ம் ஆண்டு போரிட்டு தன்னோடு இணைத்துக் கொண்டபோது ரஷ்யாவுக்கு வாக்னர் குழு பெரிதும் உதவியிருக்கிறது. அந்தச் சமயத்தில்தான் வாக்னர் குழு பற்றிய செய்திகள் வெளியுலகுக்குத் தெரியத் தொடங்கின.

வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின்

தன்னை தனியார் ராணுவமாக அறிவித்துக்கொண்ட வாக்னர் குழு, 2022-ம் ஆண்டில் `பி.எம்.சி வாக்னர்’ என்ற பெயரில் தனியார் நிறுவனமாகப் பதிவுசெய்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தலைமையகத்தையும் திறந்தது. காசு வாங்கிக்கொண்டு மனித உயிர்களைப் பறிக்கும் இந்த வாக்னர் குழுவை விமர்சிப்பவர்கள், இதைக் கூலிப்படையாகவே பார்க்கின்றனர். ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டாலும், புதினின் நெருங்கிய வட்டாரத்திலிருந்த ப்ரிகோஜினின் வாக்னர் குழுவை அங்கீகரித்திருக்கிறது ரஷ்ய அரசு. உக்ரைனுக்கு எதிரான போரிலும் இந்தக் குழு கடந்த வாரம் வரை முக்கிய பங்காற்றியது.

புதினின் சமையல் கலைஞர் டு ரஷ்யாவின் எதிரி!

வாக்னர் குழுத் தலைவர் ப்ரிகோஜின், ஆரம்பக்காலத்தில் மாஸ்கோவிலுள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினின் சமையல் ஒப்பந்தங்களைப் பெற்றவர். அதிபர் புதினின் உடல்நிலைக்கு ஏற்ப அவரது உணவுமுறையை வடிவமைத்தவர்களில் ப்ரிகோஜின் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ப்ரிகோஜினும் புதினைப்போலவே செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் என்பதால், எளிதில் அதிபர் மாளிகையின் முக்கியப் புள்ளியாக மாறிவிட்டார். வாக்னர் குழுவின் தலைமைப் பதவிக்கு ப்ரிகோஜின் வந்ததற்கு புதின்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். புதினுக்காகப் பல்வேறு ரகசிய ஆபரேஷன்களை செய்த வாக்னர் குழு, சென்ற வாரம் அவருக்கு எதிராகத் திரும்பியது.

வாக்னர்: யெவ்ஜெனி ப்ரிகோஜின் – புதின்

உக்ரைனின் பாக்முட் நகரைக் கைப்பற்றிவிட்டால், நாட்டையே எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என்று திட்டமிட்டது ரஷ்ய ராணுவம். எனவே, பாக்முட்டைக் கைப்பற்றத் தனி கவனம் செலுத்தி, `பேட்டில் ஆஃப் பாக்முட்’ என்ற பெயரோடு போருக்குள்ளேயே ஒரு போரை நடத்தியது ரஷ்யா. பல மாதங்களாகியும் ரஷ்ய ராணுவத்தால், பாக்முட் நகரைக் கைப்பற்ற முடியாமல்போக, அங்கு வாக்னர் குழுவை இறக்கினார் புதின். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை ஆரம்பத்தில் வழங்கிய ரஷ்ய ராணுவம், நாளடைவில் அதைக் குறைத்துக்கொண்டதாக வாக்னர் குழு கூறியது. மேலும், தங்கள் படையைச் சேர்ந்தவர்களையே ரஷ்ய ராணுவம் குறிவைத்துத் தாக்குவதாகவும் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், வாக்னர் குழுவைக் கட்டுப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியது ரஷ்யா அரசு. `ரஷ்யாவிலுள்ள அனைத்து தனியார் படைகளும், ஜூலை 1-ம் தேதிக்குள் பாதுகாப்புத்துறைக்குக்கீழ் வரவேண்டும்’ என அறிவித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு. இந்த முடிவுக்கு அதிபர் புதினும் தலையசைக்க, கடுங்கோபத்தில் ஆழ்ந்தது வாக்னர் குழு. “பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு, ரஷ்ய ராணுவத் தலைவர் வலேரி ஆகியோர் திறமையற்றவர்கள். இவர்கள் இருவரும் திட்டமிட்டு வேண்டுமென்றே வாக்னர் குழுவைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுகின்றனர்” என்று கடந்த சில வாரங்களாகவே ப்ரிகோஜின் கூறிவந்தார்.

கிளர்ச்சி தணிந்தது எப்படி?

சென்ற வார இறுதியில், உக்ரைனில் போரிட்டுவந்த வாக்னர் படையினர் திடீரென ரஷ்யாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். ரோஸ்டோவ் நகருக்குள் நுழைந்து, அங்குள்ள ராணுவத் தலைமையகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் மாஸ்கோவை நோக்கியும் வாக்னர் படை நகர, பதறியடித்து பாதுகாப்பை அதிகப்படுத்தியது ரஷ்ய ராணுவம். முக்கிய நகரங்களிலும் ராணுவத்தைக் குவித்தனர். இது தொடர்பாகப் ப்ரிகோஜின், “நியாயமற்ற காரணங்களைச் சொல்லி உக்ரைன்மீது போர் தொடுத்திருக்கிறார் புதின். ரஷ்ய ராணுவத்தினர் நிகழ்த்திவரும் தீமைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் ரஷ்யாவில் முன்னேறி வருவது, ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதியோ, புரட்சியோ அல்ல; இது நீதிக்கான அணிவகுப்பு” என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே பேசிய புதின், “தீவிரவாதத்தைக் கையிலெடுத்து நாட்டுக்குத் துரோகம் செய்பவர்கள் நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள். இது முதுகில் குத்தும் செயல்” என வாக்னர் குழுவின் படையெடுப்பை விமர்சித்தார். இந்த நிலையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, புதினின் அனுமதியுடன் ப்ரிகோஜினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன் பிறகு, அணிவகுப்பை நிறுத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார் ப்ரிகோஜின். பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ப்ரிகோஜின் பெலாரஸுக்குச் சென்று தஞ்சமடையவிருப்பதாகவும், அவர்மீதான வழக்குகளை ரஷ்யா கைவிடுவதாக ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இனிமேல் வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்

இதற்கிடையில், `ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள், வாக்னர் குழுவின் முக்கியத் தலைவர்களின் குடும்பத்துக்கு எதிராக மிரட்டல்கள் விடுத்ததுதான், ப்ரிகோஜின் தனது படைகளை பின்வங்கியதற்கு முக்கிய காரணம்’ என்று சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

“புதின் அதிபரான பிறகு சொந்த நாட்டுக்குள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் இதுதான். வாக்னர் குழுவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, அந்தக் குழுவின் தலைவர் ப்ரிகோஜின்மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, புதினுக்கு எதிராக நின்றவர்மீது நடவடிக்கை எடுக்காதது உலக அரங்கில் அவர் இமேஜை குறைத்துக் காட்டியிருக்கிறது. உள்நாட்டிலேயே புதினுக்கு எதிராகக் கிளம்பிய கிளர்ச்சி உடனடியாகத் தணிக்கப்பட்டிருந்தாலும், உலக அரங்கில் அவரது செல்வாக்கை இந்தச் சம்பவம் நிச்சயம் சற்று குறைத்திருக்கிறது” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.