சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை (28.06.2023) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொள்ளவிருக்கிறார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசியல் கட்சியினர் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டிருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததாம். அதனால் அவர்கள் பாதுகாப்பினை அதிகப்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு நேற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருந்தார்.

அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தலைமையில் நடைபெறவிருப்பதால், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்ட அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவர வேண்டும். அதே சமயம் கைப்பேசிகள் எடுத்துவருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும், சேலம் மாவட்டக் காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சுற்றறிக்கை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது. பலர் இந்தச் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காவல்துறையினரின் அறிவிப்பும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவிப்பும் இந்த விவகாரத்தில் முரண்பட்டன.

இந்த நிலையில் நேற்றைய தினம், `ஆளுநர் வருகையை முன்னிட்டு, கறுப்பு நிற ஆடை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும்’ என வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வாபஸ் பெற்றிருக்கிறது.