`ஊழல்வாதிகள் என்று சொன்னவர்களுக்கு அமைச்சர் பதவி; பிரதமர் மோடிக்கு நன்றி!' – சரத் பவார் கருத்து

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், இன்று கட்சியை உடைத்துக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பா.ஜ.க-சிவசேனா (ஷிண்டே) அமைச்சரவையில் சேர்ந்திருக்கிறார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பேட்டியளித்த அஜித் பவார், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு நன்றாக முன்னேறி வருகிறது. மற்ற நாடுகளிலும் மோடி பிரபலமாக இருக்கிறார். அவரையும், அவரது தலைமையையும் அனைவரும் ஆதரிக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அதற்காகத்தான் இப்போது இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இப்போது பலர் எங்கள்து முடிவை குறை சொல்வார்கள். அதற்கு நாங்கள் மதிப்பளிக்காமல், மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

சரத் பவார் – அஜித் பவார்

எங்கள் எம்.எல்.ஏ-க்கள் பலர் எங்களது முடிவில் திருப்தி அடைந்துள்ளனர். நாங்கள் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தை பயன்படுத்துவோம். முழு தேசியவாத காங்கிரஸ் கட்சியாகத்தான் சேர்ந்திருக்கிறோம். ஏற்கெனவே எனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்” என்றார்.

இது குறித்து அமைச்சரவையில் சேர்ந்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால் அளித்த பேட்டியில், “எங்கள் மீதான வழக்குகள் காரணமாகத்தான் நாங்கள் இங்கு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எங்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குகள் இல்லை. விசாரணையும் எதுவும் நடைபெறவில்லை. எங்களுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாததால் கோர்ட்டும் எங்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நாங்கள் நெருக்கடியின் காரணமாகத்தான் பா.ஜ.க-வோடு சேர்ந்தோம் என்று கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. நாங்கள் அரசில் மூன்றாவது கட்சியாகத்தான் சேர்ந்திருக்கிறோம். நாங்கள் கட்சியை உடைத்துவிட்டு வந்திருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியாகத்தான் வந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

விரைவில் புதிய முதல்வர்

இது குறித்து சிவசேனா அமைச்சர் உதய் சாவந்த் கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 210-ஆக அதிகரித்துள்ளது. அஜித் பவார் சிறந்த நிர்வாகி. அவர் எங்களோடு வந்திருக்கிறார்” என்றார். சிவசேனா (உத்தவ்) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் இது குறித்து கூறுகையில், “விரைவில் மகாராஷ்டிராவிற்கு புதிய முதல்வர் பதவியேற்பார். ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இழப்பார். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டது ஓர் அரசியல் நிலநடுக்கம். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.

முன்னதாக சரத் பவாருடன் சஞ்சய் ராவத் போனில் பேசினார். அதில், “ `எனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் கட்சியை புதுப்பித்துக் காட்டுவேன்’ என்று சரத்பவார் என்னிடம் தெரிவித்தார்” என்று சஞ்சய் ராவத் கூறினார்.

சரத் பவார்

மூத்த அமைச்சர்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்திருப்பது குறித்து சரத் பவார் அளித்த பேட்டியில், “எங்களது கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு விதமான முடிவை எடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இப்போது அமைச்சர்களாகி இருக்கும் சில தலைவர்களின் பெயர்கள் நீர்ப்பாசன ஊழலில் இருந்தது. இன்று அனைவரும் ராஜ் பவனில் அமைச்சர்களாக பதவியேற்று இருக்கின்றனர். அஜித் பவார் பிரிந்து சென்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஊழல்வாதிகள் என்று யாரை பிரதமர் மோடி அழைத்தாரோ அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்க அனுமதித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே, “தங்களை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் அமைச்சர்களாகி இருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.